லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய அகதிகள் 10 பேர் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் நீடித்து வரும் மோதல்களில் அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதல்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

நபித்தி நகரில் சிரிய அகதிகள் தங்கி இருந்த கட்டடம் ஒன்றே நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத களஞ்சியம் ஒன்றையே தாக்கியதாக இஸ்ரேல் கூறியதை அந்த கட்டட உரிமையாளர் மறுத்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் அடங்குவதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

‘எனது சகோதரியின் இரு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். எனது மற்றொரு மருமகனும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்’ என்று ஹுஸைன் அல் ஹுஸைன் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ‘அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு எதவும் தெரியாது. அவர்கள் இளம் தொழிலாளர்கள் இஸ்ரேலியப் படை அவர்களையே இலக்கு வைத்தது’ என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் கிப்புட்ஸ் மற்றும் ஏனைய இஸ்ரேலிய நிலைகள் மீது சரமாரி ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளது. முதல் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும் இரண்டாவது தாக்குதலில் இரு இஸ்ரேலிய படையினர் காயமடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது.

கடந்த ஒக்டோபர் 7 இல் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கிட்டத்தட்ட தினசரி பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply