அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கொலை செய்த இலங்கையர்: குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் நீதிமன்றாத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் புறநகர் பகுதியான சான்ட்ஹர்ஸ்டில் தனது மனைவியை கொலை செய்த சம்பவத்தில் தற்போது தினுஷ் குரேரா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியாவின் உச்ச நீதிமன்ற நடுவர் மன்றம் வெள்ளிக்கிழமை கொலை வழக்கில் தினுஷ் குரேரா (47) குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.

தினுஷ் குரேரா தனது மனைவி நெலோமி பெரேராவின் மரணம் தொடர்பாக ஒரு மாத கால விசாரணையை எதிர்கொண்டிருந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும் தற்பாதுகாப்பிற்காகவே இதனை செய்ததாக அவர் நீதிமன்றில் கூறியிருந்தார்.

2022 டிசம்பர் மூன்றாம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

மெல்போர்ன் வீட்டில் நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் போது தனது மனைவி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் விரலைக் கடித்ததாகவும் நீதிபதியிடம் கூறினார்.

எவ்வாறாயினும், 43 வயதான நெலோமி பெரேராவின் உடலில் 35 தனித் தனி காயங்கள் காணப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது தாயார் இறந்தபோது 16 வயதாக இருந்த சிறுமி, தனது தந்தை, கத்தி மற்றும் கோடரியால் பலமுறை தாயை தாக்கியதைக் கண்டதாக நீதிமன்றில் கூறினார்.

மேலும், தனது 17 வயது மகனை கோடரியால் தாக்கியதை தினுஷ் குரேரா மறுத்துள்ளார்.

மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார்.

இந்நிலையில், தினுஷ் குரேரா மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply