ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட போலி வாக்களிப்பு: எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு

எம்பிலிப்பிட்டியவில் பொது இடத்தில் போலியான வாக்களிப்பு நிலையத்தை நடத்தி அதன் பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் குழுவினால் இந்த போலி வாக்களிப்பு நிலையம் நடத்தப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து சில வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, போலி வாக்குச் சீட்டு தயாரித்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் எம்பிலிப்பிட்டிய மாநகர சபைக்கு முன்பாக தெரிவு செய்யப்பட்ட சிலரின் பங்கேற்புடன் இந்த போலி வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply