கட்சித் தீர்மானத்தை சிறீதரனும், மாவையும் ஏற்றுள்ளனர்: சஜித்திற்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு மாவை சேனாதிராஜா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, உரிய நடைமுறைகளை பின்பற்றி எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

“கட்சி எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என மாவை சேனாதிராஜா மற்றும் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளோம். சரியான முறைப்படி எமது கட்சி எடுத்த முடிவு அது.

தற்போது அந்த முடிவை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே எதிர்கால வேலைகள் குறித்து சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் கலந்துரையாட வேண்டும் என அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் அவரை கையாள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டோம்.

அவர்கள் ஆட்சிக்கு வரும் போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ள பல விடயங்கள் இருப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளை அண்மையில் கூடி, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஏகமானதாக முடிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply