சஜித்துக்கு ஆதரவளிக்க காரணம் என்ன : தமிழரசுக் கட்சியின் விசேட அறிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளது. வவுனியாவில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு கடந்த வாரம் கூடியிருந்தது.

இங்கு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், சி.வி.கே சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் சேனாதிராசாவும், அந்த கட்சியின் உறுப்பினரான சிறதனும் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்த போதிலும் பின்னர் கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.

சிறிதரன் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டாலும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்வதிலும் ஆதரவு வழங்குவதையும் அவர் அழுத்தமாக கூறியிருக்கிறார்.

இங்கு சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆராயப்பட்டது. தமது அபிலாஷைகளுக்கு மிகவும் அண்மித்ததாக சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனமே காணப்படுவதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply