மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் பலி

மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மகாதெனிய, பலாலி மற்றும் இப்பாகமுவ பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (29) காலை மீகொடை கொழும்பு பாதுக்கை 125 வீதியின் மஹாதெனிய பகுதியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென வீதியை நோக்கி செலுத்த முற்பட்ட போது பாதுக்கை திசையிலிருந்து கொடகம நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றுக் காலை, பலாலி பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியின் 36வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகாமையில், பருத்தித்துறை திசையிலிருந்து காங்கேசன்துறை திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி தெலிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலாலி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பாகமுவ மடகல்ல வீதியின் 05 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில், இப்பாகமுவ திசையிலிருந்து மடகல்ல திசை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, முன்னால் அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் சாரதியும், பின்பக்கத்தில் அமர்ந்து சென்றவரும் பலத்த காயங்களுக்குள்ளானதுடன், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி உயிரிழந்துள்ளார்.

கும்புக்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த தொரட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 38 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply