வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வௌிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ள நிலையில், கடந்த 2023 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 ஆக காணப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும். இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 70,396 பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் வௌிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 62,177 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 8,219 பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், அதேவேளை அரை திறன் பயிற்சி வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 ஆகும்.
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், இவர்களின் எண்ணிக்கை 38,133 ஆகும்.
இந்த காலப் பகுதியில், 6,391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளனர், மேலும் 6,295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர்.
மேலும், 5,870 பேர் தென் கொரியாவிற்கும், 5,677 பேர் குவைட் நோக்கியும், 3995 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பணி நிமித்தமாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply