பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.
குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
அதன் வேட்புமனுக்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அதன்படி, வேட்புமனுக் குழு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பான அறிவிப்பை நாளைய தினம் வெளியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply