ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.3000 மாதாந்தக் கொடுப்பனவு :அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன.
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இதற்கான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
2024 ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் இடைக்கால கொடுப்பனவான ரூ.3000 கிடைக்காததால் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, அரசின் நிதி நெருக்கடிக்குகு மத்தியிலும் இம்மாதம் முதல் இந்த தொகையை வழங்க இதன்போது ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
ஒக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வைப்பிலிடப்பட் டுள்ளதால், ஒக்டோபர் மாதத்துக்கான ரூ.3000 கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களது கணக்கில் வைப்பிலிடுமாறும் 3000 ரூபா கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply