வானில் வட்டமடித்த விமானம்: நடுவானில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்களை விவரித்த பயணி
திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்தது. விமானம் புறப்பட்ட நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாத நிலையில், 140க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் விமானத்தின் எரிபொருள் தீர்ந்தவுடன் அதனை பத்திரமாக தரை இறக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் விமான போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றுகிறது.
இங்கிருந்து சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மலேசியா, துபாய் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 50 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது அங்கு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சர்வதேச தரத்துடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள ஐந்து சதவீத பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்காக சுமார் 150 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்து வருகிறது. திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
சுமார் 5.40 மணிக்கு விமானம் ஓடுதளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்தது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன. மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்தனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்தனர். மேலும் விமானம் தரை இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் இரவு 8.30 மணிக்கு நேரத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என அவர் தெரிவித்தார். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் சுமார் 2.30 மணி போராட்டத்துக்குப் பிறகு விமானம் பத்திரமாக தரையிறப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply