மாணவியின் தற்கொலை: கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பாதுகாப்பு குறைபாடுகளும் காரணமா?

மனஅழுத்தமா, மனவேதனையா அல்லது நண்பர்களை பிரிந்த துயரமா என பல கேள்விகளை நம் மத்தியில் வைத்துவிட்டு ரத்யா மெத்மலீ குணசேகர, தாமரைக் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தலைநகர் கொழும்பில் எங்கிருந்து பார்த்தாலும் அழகான வர்ணங்களுடன் காட்சியளிக்கும் கொழும்பு தாமரைக் கோபுரம், குறித்த சம்பவத்தின் பின்னர் பார்ப்பவர்களை சற்று சிந்திக்கவும் வைக்கிறது.

கொழும்பு தாமரைக் கோபரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் உயிரிழப்புக்கு தாமரைக் கோபுரத்தின் பாதுகாப்பு குறைபாடுகளும் காரணமா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவி தாமரை கோபுர வளாகத்திற்குள் நுழைந்த சந்தர்ப்பத்திலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பம் வரையிலான சுமார் 20 நிமிடமாக தாமரை கோபுர வளாகத்தில் தரித்து இருந்துள்ளார்.

இவை அனைத்தும் உள்ளடங்கும் காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

பாடசாலை சீருடையில் தாமரைக் கோபுரத்திற்கு உள்நுழைந்த பின், தனது பாடசாலை புத்தகப்பையில் எடுத்து வந்திருந்த மாற்று உடையை அங்கு மாற்றியுள்ளார்.

தாமரைக் கோபுரத்தின் 29ஆவது மாடியில் உள்ள பார்வையாளர் தளத்திற்கு உள்நுழைந்த பின்னர் குறித்த மாணவி நேரடியாக அவருடைய நண்பர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட அல்டயார் அடுக்குமாடி கட்டிடம் தெளிவாகத் தெரியும் பிரதேசத்திற்கு செல்வது , சிசிரிவி காணொளிகளை வைத்து மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிலிருந்து அவர் சுமார் 2 நிமிடங்கள் அல்டயார் அடுக்குமாடி கட்டிடம் இருக்கும் திசையை பார்த்துள்ளார். அதன்பின்னர் அவர் தாமரைக் கோபுரத்தின் பார்வையாளர் தளத்தை சுற்றி சென்றுள்ளார். இரு தடவைகள் சுற்றி வந்த மாணவி, புத்தகப்பையை வைத்து விட்டு ஆழ்ந்த யோசனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் எழுந்து கோபுரத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். தாமரைக் கோபுரத்தின் பார்வையாளர் தளத்தைச் சுற்றி காணப்படும் உயரமான பாதுகாப்புச் சுவரை ஏற முற்படும் போது அது முடியாமல் போனதால் முதல் தடவை தற்கொலை செய்துகொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

முதலாவது முயற்சி தோல்வியுற்றதால் சிறிது நேரத்தில் மீண்டும் அல்டயார் அடுக்குமாடி கட்டிடம் இருக்கும் திசையை உற்று பார்த்துக்கொண்டிருப்பது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

பின்னர் மீண்டும் ஒரு முறை கீழே குதிக்க முயற்சி செய்து பாதுகாப்பு கம்பிகள் காரணமாக அது முடியாமல் போக, தனது சப்பாத்துக்களை கழட்டி விட்டு அவர் சுவர் மீது ஏற முயற்சி செய்துள்ளார். இறுதியில் மாணவி பாதுகாப்பு சுவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த அனைத்து காட்சிகளும் சிசிரிவி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகளவில் மக்கள் நடமாடும் இந்தப் பகுதியில் சிசிரிவி காட்சிகள் அடிக்கடி அவதானிக்கப்படின் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்பது பாதுகாப்பு துறைகளின் கருத்தாக உள்ளது.

இதேவேளை, இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு துறைகளைச் சார்ந்த 5 பேரை குறித்த தளத்திற்கு பொறுப்பாக பாதுகாப்புக்கு நியமித்திருந்ததாக தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் சற்று அவதானமாக இருந்து இருந்திருந்தால் இந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாதுகாப்பு காணப்படுவதாக கூறப்படும் தாமரைக் கோபுரத்திலிருந்து கீழே குதித்துள்ளார் என்பது 3ஆவது மாடியில் திறந்த பிரதேசத்திலிருந்து மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போதே அறியக்கிடைக்கிறது. 250 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த மாணவியின் உயிர் அப்போது பிரிந்திருந்தது.

இது குறித்து கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் கூறுவதாவது,

“விபத்துகளை தடுக்கும் வகையில் கட்டிடத்தின் கண்காணிப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சர்வதேச தரத்தின்படி கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் கண்காணிப்பு அறையில் இருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு நிர்வாகமாக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

மாணவி பார்வையாளர்கள் தளத்தில் தங்கியிருந்த நேரத்தில், எங்கள் ஊழியர்கள் ஐந்து பேர் பணியில் இருந்தனர். அவர்கள் பார்வையாளர்கள் தளத்தை சுற்றி நடந்து கவனித்து வருகிறார்கள், அவர்களின் அவதானம் மாணவி மீது விழுந்த போது , ​​​​மாணவி எந்த பதற்றமும் இல்லாமல் சுற்றி பார்த்தாள், எனவே அவள் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தாள் என்ற சந்தேகம் இருக்கவில்லை.

இரண்டு முறை கீழே குதிக்க முயன்றது சிசிரிவி மூலம் அவதானிக்கப்பட்டாலும் , ஒரு சில நொடிகளில் இதுபோன்ற உடனடி சம்பவத்தைத் தடுப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

காரணம், தற்கொலைத் திட்டத்துடன் வருபவரின் மனநிலையை அடையாளம் காண முடிவதில்லை.

இருந்தபோதிலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் செயல்களைத் தடுக்க நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

வெளிநாடுகளில், உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதன் மூலம் தனிப்பட்ட மனநிலையைக் கண்டறிய உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளளோம்” என தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

கடந்த 7ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ரத்யா மெத்மலீ குணசேகர என்ற மாணவி கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மாணவியும் அல்டெயார் கட்டிடத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் ஒரே பாடசாலையில் நெருங்கிய நண்பர்கள் என இதற்கு முன்னர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

எனினும், மாணவியின் பாடசாலையில் பகடிவதை அதிகமாக காணப்பட்டதாக மாணவியின் தந்தை வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply