தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்கள் அசௌகரியத்தில்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பொதுமக்கள் பலர் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளனர். எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இதற்கான காரணம் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, எதிர்வரும் இரு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி மேற்கு- வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை அண்மித்த பகுதியான தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 134, 484 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

1753 குடும்பங்களைச் சேர்ந்த 9663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 20553 குடும்பங்களைச் சேர்ந்த 82839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 10914 குடும்பங்களைச் சேர்ந்த 40231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் களு, களனி, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா என்பன பெருக்கெடுத்துள்ளன.

6 மாவட்டங்களுக்கு பூரண மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply