அதானி குழும காற்றாலை மின் திட்டம் மீள் பரிசீலனைக்கு சட்டமாஅதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் அதானி நிறுவனம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை, மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். விடத்தல்தீவில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாகவுள்ள அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் இதை,அறிவித்தார்.
சட்ட மாஅதிபரின் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா அதனைத் தெரிவித்துள்ளார்.
மனுக்கள் மீதான விசாரணை நேற்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் விசாரணையில் போது, அமைச்சரவையின் செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, இந்த உத்தேச காற்றாலை மின் திட்டத்தை, மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இலங்கை அரசுக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களின் உள்ளடக்கத்தை கருத்திற் கொண்டு, உரிய திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்து, அதன் பின் முடிவு மேற்கொள்ளப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். தற்போதைய இடைக்கால அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை அறிவிப்பதற்காக திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்தை கோரியுள்ளார். அதுவரை திட்டத்தின் தற்போதைய நிலை அவ்வாறே தொடரும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், அந்தந்த மனுக்களில் பிரதிவாதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், உத்தேச அமைச்சரவை உறுப்பினர்களை பிரதிவாதிகளாக நியமித்து மனுவில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply