மாற்றம் என்பது பதவியில் அல்ல: சமூகத்தில் ஏற்பட வேண்டியது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஒரே விடயம் மாற்றம்.
இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு தேர்தல் அரசியல் தலைவர்களும் கோராத ஒரு மாற்றத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கோரினார். கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார மேடைகளில் ‘இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றமோ அல்லது ஆளும் குழுவின் விலகல் காரணமாக வேறு ஒரு குழுவால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதோ அல்ல. இது ஒரு பாரிய சமூக மாற்றம்.’ என ஒலிக்கப்பட்டு வந்தது.
இதனை எந்தளவு தூரத்திற்கு சிந்தித்து செயல்படுத்தியுள்ளோம் என்பது கேள்விக்குறி தான்.
மாற்றத்தை விரும்பி வாக்களித்து ஜனாதிபதி பதவியில் அமர்த்தியவுடன் எங்களுக்கான கடமை, பொறுப்பு நிறைவடைந்து விட்டதா?
‘சமூக மாற்றம்’ என்பது பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு சமூகக் கோட்பாடு ஆகும்.
தாராளவாத சமூக அறிவியல் கோட்பாட்டில், ‘சமூக மாற்றம்’ என்பது பொருளாதார மாற்றத்துடன் சமூக கட்டமைப்பு மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் திட்டத்தில் ‘பாரிய சமூக மாற்றம்’ என்று விவரிக்கப்படுவது பொருளாதாரம், அரசியல், நிர்வாகம் போன்ற முழு சமூக மற்றும் அரசியல் அமைப்பையும் ‘மீண்டும் கட்டியெழுப்புவதாக’ விவரிக்கப்படுகிறது.
இது 2022 போராட்டத்திலிருந்து உருவான ‘மாற்றம்’ எனக் கூறினால் அது தவறில்லை.
இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கடமையும் பொறுப்பும் இத்துடன் நின்றுவிடவில்லை.
கடந்த சில வருடங்களாகவே பல சவால்களை எதிர்கொண்ட நாம் இத்துடன் நின்றுவிடக்கூடாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ‘மாற்றம்’ மற்றும் ‘எதிர்பார்ப்புகள்’ தொடர்பிலும் நாம் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது அதிகாரத்தில் உள்ளது.
அரசியல் ரீதியாக செயற்படவும், சிந்திக்கவும் இன்னுமும் நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகு அரசியல் ரீதியாக செயலற்றவர்களாக மாறுவதை விட, நாட்டு மக்கள் அரசியல் செயல்பாட்டைத் தொடர வேண்டியது அவசியம்.
உண்மையான மாற்றத்தைத் தேடும் சுறுசுறுப்பான நடவடிக்கை என்பது தற்போதைய தேவையாக உள்ளது.
ஒரு அரசியல் உரையாடலைக் கட்டியெழுப்பவும் பராமரிக்கவும், இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள், சிறுபான்மை உரிமைகளுக்கான இயக்கங்கள் உள்ளிட்ட சிவில் சமூக இயக்கங்கள் இந்த இடத்தை பூர்த்தியாக்க வேண்டும்.
அப்போது நாங்கள் கோரும் மாற்றம் உருவாகும். அதற்காக நாம் எமது அதிகாரபூர்வமான பங்கை வகிக்க வேண்டும்.
மாற்றம் என்பது எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உருவாக்கப்பட வேண்டும், அதுவே சமூக மாற்றத்திற்கும் வழி வகுக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply