ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், தொழிற்சங்க போராட்டம்: நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு

ரயில்வே திணைக்களத்திற்குள் உள்ள நிர்வாக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் அமைச்சரும் தீர்வுகாணாவிட்டால், இன்று புதன்கிழமை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”ரயில்வே பொது கண்காணிப்பாளரின் உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு சில அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் ரயில்வே பொது மேலாளரால் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை வழங்க முடியவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சின் செயலாளர் அல்லது அமைச்சருடன் நடத்தப்படும் கலந்துரையாடலின் பின்னர் எமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்.பயணிகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுத் தரவும், ரயில் சேவைகளை பராமரிக்கவும் ரயில்வே திணைக்களம் தவறியுள்ளது.

தினமும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது தடம் புரள்கின்றன.கடந்த அரசாங்கம் இருந்த போதும் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம், ஆனால் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக எங்கள் கோரிக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு அல்லது அரசியல் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதை நாங்கள் ஒருபோதும் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் வேலைநிறுத்தமே எங்களுக்கு உள்ள ஒரே வழி.

ஜனாதிபதியும் அமைச்சரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம். அவ்வாறு இல்லையெனில் இன்று தனித்துவமான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராக அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த உள்ளதாக நேற்று முன்தினம் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களை, குறித்த பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கு அல்லது பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் குறித்த நடைமுறைக்கு மாறாகவே இடம்பெறுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply