முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம்

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது.

முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

இது குறித்து கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) தெரிவிக்கையில்,

யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எனினும், எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும்.

ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் இருப்பதால் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply