வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

இயற்கை பேரிடர்கள் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம்.

இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் வடமேற்கு திசையில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, அம்பாறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் மணிக்கு 40 கிலோமீற்றரிலும் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த அபாயம் ஏற்பட்டால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் 03 மாகாணங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்திர் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனரத்த நிலைமைகளை கருத்திற்கொண்டு மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோர் இடம்பெயரும் நிலை ஏற்படுமாயின் 03 நாட்களுக்கு தொடர்ச்சியான உணவு வழங்குதற்கும் அதன் பின்னர் தேவைக்கேற்ப உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அனரத்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் இந்தியாவின் தமிழ்நாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply