அரசியல் இராணுவ மயப்படுத்தப்படும் அபாயம்

அரசியல் இராணுவ மயப்படுத்தப்படும் அபாயம் பற்றி சோஷலிச மக்கள் கூட்டணி மக்களை எச்சரித்துள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அக் கூட்டணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார இது பற்றி கூறும் போது, ஐக்கிய தேசிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் இராணுவ சீருடையில் இல்லாவிட்டாலும் அவரது இராணுவ மனோபாவம் மாறிவிடாது. சரத் பொன்சேகா அரசியலுக்குள் இராணுவத்தை கொண்டு வருவார் என்று வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டுகிறார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய யுகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது அவசியம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியூ குணசேகர, சர்வதேச பிரச்சினைகள் விஞ்ஞான ரீதியாகவும் யதார்த்த பூர்வமாகவும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றனர். எனினும் விடுதலைப் புலிகள் நெகிழ்ச்சிப் போக்கை காட்டாத நிலையில் அவர்கள் வெற்றி பெற முடியாது போய்விட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷவும் அதே முறையைத் தான் கையாண்டார்.

எனினும் இறுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதைவிட வேறு எந்த வழியும் அவருக்கு இருக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது வடக்கு, கிழக்கில் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இராணுவம் அரசியல் மயப்படுத்தப்படுவதும், அரசியல் இராணுவ மயப்படுத்துவதும் ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. இந் நிலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் பிரசன்னம் மேற்குலக நாடுகளினால் எமது பொருளாதார வெற்றிகளை தடுக்கும் ஒரு சதி முயற்சி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமசமாஜ கட்சியின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அமைச்சருமான திஸ்ஸ விதாரண இது பற்றி கூறும் போது,

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேற்குலக நாடுகளின் நிதிப் பிரச்சினை காரணமாக இலங்கையர்களுக்கு குறைந்த அளவு கஷ்டங்களே ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறார்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத குழு மட்டுமல்ல, பிரிவினைவாத சக்தியும் கூட. இந்த இரு சக்திகளையும் இல்லாதொழித்தவர் ஜனாதிபதி ராஜபக்ஷவே. சர்வ கட்சி குழுவின் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட் டுள்ளது.

தேர்தலுக்குப் பின் அந்த ஆவணத்தில் உள்ள சிபாரிசுகளை ஜனாதிபதி அமுல்படுத்துவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply