யாரை யார் ஏமாற்றுவது?
எதிரணிக் கட்சிகள் ஒற்றைவரிக் கொள்கையுடன் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே அக்கொள்கை.
நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானது என்ற அபிப்பிராயம் அந்த நாளிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் இக்கருத்தைக் கூறுகின்றார்கள். இது நியாயமானதாகவே தெரிகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் ஒரே தொகுதியாக இருப்பதால் சிறுபான்மையினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே இந்த வேட்பாளருக்குப் பின்னால் இருக்கின்றன. சமூக, பொருளாதாரக் கொள்கைகளிலும் வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. எவ்விதத்திலும் உடன்பாடு காண முடியாத நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற ஒற்றைவரிக் கொள்கையை முன்வைத்திருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியே நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியது. நேற்று வரை இதற்கு ஆதரவாக இருந்த கட்சி இன்று எதிர்க்கின்றது என்றால் அதைச் சந்தர்ப்பவாதம் என்றுதானே சொல்ல வேண்டும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் எனக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக விரோதமான தேர்தல் முறையை மாற்றுவது பற்றி எதுவும் பேசவில்லை. எல்லாம் வாசியின் படிதான். தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தினால் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சூன்யம் ஆகிவிடும் என்பதால் அதற்கு அவர்கள் தயாரில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டதால் கூடுதலான பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு இல்லை. தனித்துப் போட்டியிட்டால் பாராளுமன்றத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது. அதனால், முதலாளித்துவ எதிர்ப்பையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கிடப்பில் போட்டுவிட்டு எப்படியாவது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளுமன்றக் கதிரைகளைப் பிடிக்கலாம் என்று மக்கள் விடுதலை முன்னணி கணக்குப் போடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசுகின்றார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும் என்று திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் கூறியது மக்கள் விடுதலை முண்ணியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டதாலாக இருக்க வேண்டும்.
இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வெவ்வேறு நோக்கங்களுடன் கூட்டுச் சேர்ந்தாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக ஒன்றாகப் பிரசாரம் செய்கின்றன. ஆனால் இவர்களின் வேட்பாளரே இந்தப் பிரசாரத்தின் அத்திவாரத்தை உடைத்துவிட்டார்.
தான் தெரிவு செய்யப்பட்டால் வில்லியம் கொபல்லாவவைப் போல சம்பிரதாய ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை என்று பொன்சேகா அண்மையில் கூறினார்.
வில்லியம் கொப்பல்லாவ நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதி. அவரைப் போல இருக்க மாட்டேன் என்றால் நிறைவேற்று அதிகாரத்தைக் கைவிட மாட்டேன் என்பதே அர்த்தம்.
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் மக்களை ஏமாற்றுகின்றனவா? அல்லது பொன்சேகா இரண்டு கட்சிகளையும் ஏமாற்றுகின்றாரா?
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply