பொன்சேகாவின் கூற்று உண்மைக்கு புறம்பானது
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அப்போது களமுனையில் இருந்த பிரிகேடியர் சவேந்திர சில்வா சுட்டுக் கொன்றதாக கூறியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது. சரத் பொன்சேகாவின் இந்த கூற்றானது நாட்டுக்கும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று மிகவும் பாதகமும், பாரதூரமானதுமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அப்போது களமுனையிலிருந்த அப்போதைய பிரிகேடியர் சவேந்திர சில்வா சுட்டுக்கொன்றதாக சரத் பொன் சேகா ஆங்கில வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, பொலிமா அதிபர் மஹிந்த பாலசூரிய, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில், ‘தற்பொழுது மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வரும் இதே சரத்பொன்சேகா தனக்கு ஜுலை மாதம் 10ம் திகதி அம்பலாங்கொடையில் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியதாவது:-
“நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன்.
படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை ஏற்கவில்லை என்றார்”. எனவே அன்று அவ்வாறு கூறிய இதே சரத் பொன்சேகா இன்று தனது இராணுவ உடையை களைந்த பின்னர் அரசியல் இலாபத்துக்காக மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இந்த நாட்டையும் படை வீரர்களையும் காட்டிக்கொடுப்பதுடன், அவர்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் பெற்றோர், ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் மற்றும் ஐந்து டாக்டர்கள் தான் வெள்ளைக் கொடிகளை காண்பித்த வண்ணம் படையினரிடம் சரணடைய வந்தவர்கள்.
அவர்கள் கொல்லப்படவில்லை. இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க உரையாற்றுகையில், அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பல கதைகளை சரத் பொன்சேகா வெளியிடலாம்.
இது சரத் பொன்சேகாவினதும் அவரது பின்னணியில் உள்ளவர்களினதும் பாரிய சூழ்ச்சியாகும். இதற்கு நாங்கள் ஒருபோதும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை.
நல்ல விடயங்களை நான்தான் செய்தேன் என்று பொறுப்பேற்கும் பொன்சேகா, தவறுகள் இருப்பின் அதனையும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே சரியான முறையாகும்.
லைபீரியா ஜனாதிபதி சார்ள்ஸ் டைலருக்கும் அந்த நாட்டு தளபதி இதுபோன்ற ஒரு சூழ்ச்சியையே செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப் பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply