பரந்துபட்ட பேச்சுவார்த்தைகள் அவசியம்; எட்கா குறித்த இருதரப்பு விரிவான கலந்துரையாடல்களை நடத்துவது இரு நாடுகளுக்கும் நல்லது : நாமல்

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ எதுவாக இருந்தாலும் நாட்டில் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியே இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறான செயல்முறையை பின்பற்றினால் அந்த செயற்பாட்டுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இந்திய எதிர்ப்பாளர்களாக இருந்துவந்த ஜே,வி.பி. இன்று இந்திய ஆதரவாளராக மாறி இருக்கின்றமை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஆனால் எட்கா போன்ற உடன்படிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பரந்துபட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் அவசியம். அது இலங்கைக்கு நல்லது. இந்தியாவுக்கும் நல்லதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கேசரிக்கு கருத்து வெளியிடுகைலேயே பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வெகுவிரைவில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கின்றது. அந்த புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கனவே நீதி அமைச்சர் அறிவித்திருக்கின்றார். அதேபோன்று புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு உள்ளடக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அதில் முக்கியமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே நாமல் ராஜபக்ஷ இது தொடர்பாக மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.

இது தொடர்பில் நாமல் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் சகல தரப்புகளுடனும் பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். சகல தரப்புடனும் பரந்துபட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தியே புதிய அரசியலமைப்பு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ எதுவாக இருந்தாலும் சகல தரப்புடனும் பரந்துபட்ட ரீதியிலான விஸ்தீரணமான பேச்சுவார்த்தைகள் அவசியமாக இருக்கின்றது. அதேநேரம் அரசாங்கம் வடக்கு கிழக்கு மலையக மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

ஆனால் எம்மை பொறுத்தவரையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட நாடு எப்படி இருந்ததோ அப்படியே கொண்டு செல்வதே அரசாங்கத்துக்கு சவாலாக மாறி இருக்கிறது.

அரசாங்கம் நாட்டை தற்போது இருந்தவாறு அப்படியே கொண்டு செல்கிறது. புதிய திட்டங்கள் எதையும் நாங்கள் காணவில்லை. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விடுத்து அரசாங்கம் நாட்டை கொண்டு செல்வதற்கே கஷ்டப்படுகின்றமையை நாங்கள் பார்க்கின்றோம்.

எப்படி இருப்பினும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேசப்படுகின்றபோது அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறை மாற்றம் குறித்தும் பேசப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது என்றால் நாட்டின் தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். ஒன்றை செய்துவிட்டு இன்னொன்றை செய்யாமல் இருக்க முடியாது. இரண்டையும் ஒன்றாகவே செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தலைமையிலான குழுவின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ‘’ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை நாங்கள் நல்ல சிறந்த முறையில் பார்க்கின்றோம். அது வரவேற்கத்தக்க விடயம். குறிப்பாக இந்திய எதிர்பாளராக இருந்தவர்கள் தற்போது இந்திய ஆதரவாளர்களாக செயல்படுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகிறது. கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு விடயங்கள் உள்ளன.

ஆனால் அந்த விடயங்கள் தொடர்பாக பரந்துபெற்ற ரீதியிலான பேச்சுவார்த்தைகள் அவசியம்’’ என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் எட்கா உடன்படிக்கை தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன என்று வினவியை அதற்கு பதிலளித்த நாமல் ‘’எட்கா உடன்படிக்கை தொடர்பாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அது தொடர்பாக மேலும் பரந்தபட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன. அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் நல்லதாக அமையும். இலங்கைக்கும் நல்லதாக அமையும். எனவே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி பொது இணக்கப்பட்டன. அடிப்படையில் தீர்மானம் எடுப்பது சரியாக அமையும்’’ என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply