தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர்: செல்வராஜா தனபாலசிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயக்கங்களும், இலட்சியத்தை கைவிடாத தமிழ் பேசும் மக்களின் நீண்ட வரலாறும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது உண்மையாயின் இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே பல்வேறு தரப்பிலும் காணப்படும் விருப்பமாய் உள்ளது.

இதேசமயம், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்ற முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை. இரு பிரதான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுடனும், இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக இராசதந்திரிகளுடனும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாம் தயாரித்து வைத்திருக்கும் ஒரு தீர்வுத்திட்ட யோசனைகளையும் இப்பேச்சுக்களில் முன்வைத்து உரியவர்களின் நிலைப்பாட்டையும் அறிந்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாடு என்பது ஒரு ஜனநாயகத் தளத்திலேயே கட்டடியெழுப்பப்பட முடியும். ஜனநாயகத் தளம் என்பது தேர்தல் அரசியலில் மட்டும் பங்கு பெறுவது என்னும் அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஜனநாயகத் தத்துவங்களில் முழுமையாக நம்பிக்கை வைத்து, உரிய முறையில் கலந்துரையாடல்களை நடத்தி, மக்களையும் அரசியல் முடிவுகளில் பங்காளர்களாக்கி ஒருமித்த கருத்துத் தளத்தை உருவாக்குவதற்கான ஒரு அணுகுமுறையைப் பற்றித்தான் குறிப்பிடப்படுகிறது. இதற்கு அனைவரையும் உள்வாங்கும் மனப்பாங்கும், சகிப்புத்தன்மையும் அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டும் என்பது இயல்பானது.

இது இலகுவான ஒரு விடயம் அல்ல. இதனை ஒரு சிலரால் மட்டும் சாதித்துவிடவும் முடியாது. இது ஒரு பண்பாடாக வளர்ச்சி பெற வேண்டியதாகும். நமது பண்பாடாக வளர்ச்சி பெறவேண்டியது. அதற்கான அணுகுமுறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படும் என்று நம்பலாம். இவ் உயரிய பண்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு துயரங்களைச் சந்தித்த பின்னரும் நாம் ஜனநாயக அணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவில்லை எனில் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறோம்?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குப் போவதற்கு இரு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று ‐ தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளருக்குப் போதிய அளவு வாக்குகள் கிடைக்கத் தவறின்; அவை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவுகள். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் போதியளவு அடிமட்டக் கட்டமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லாமையும் இத் தயக்கத்திற்குக் காரணமாக அமைகிறது. மற்றையது, தமிழ் பேசும் மக்கள் தனித்து நிற்காது, அனைத்துலக ஆதரவினை பெற்றுக் கொள்ளக்கூடிய தேர்தல் வியூகம் ஒன்றினை வகுப்பது.

இவை இரண்டும் மக்களில் நம்பிக்கை கொள்ளாத, மக்களில் தங்கி நிற்காத மனப்பாங்கிலும் நிலைப்பாட்டிலுமிருந்தும் தான் எழமுடியும். எந்த ஒரு அரசியல் இயக்கமும் தனது பலத்தை மக்கள் ஆதரவு என்ற தளத்திலிருந்து தான் கட்டியெழுப்ப முடியும். இம்மக்கள் பலம் என்ற தளம் எவ்வளவு வலுமாக இருக்கிறதோ அந்தளவுக்கு உள்நாட்டிலும், அனைத்துலக அரங்கிலும் தமது மக்கள் நலன் என்ற நோக்கு நிலையிவிருந்து விடயங்களைக் கையாள்வதற்கான அரசியல் வெளி அரசியல் தலைமைக்குக் கிடைக்கும்.

இவ்விடயங்களை மனதிற் கொண்டு, தமிழ் பேசும் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை இக் கட்டுரை பேசுகிறது. வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் தமது இலட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளனர் என்பதனை இடித்துரைக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவினை மறுபரிசீலனை செயு;யுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கோருகிறது.

பண்பாட்டு மேன்மை எப்போது வெளிப்படுகிறது?

ஒரு மக்கள் கூட்டத்தினது பண்பாட்டு மேன்மையானது அது நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் விதத்திலேயே தங்கியுள்ளது. அழிவுகள் ஏற்படும் போது அதிலிருந்து மீண்டெழுவதற்காக அம் மக்கள் கூட்டம் மேற்கொள்ளும் நிமிர்வும், வெளிக்காட்டும் தைரியமுமே அதன் சிறப்புக்கான அளவுகோல்கள் ஆகின்றன. கிரோசிமாவும் நாகசாகியும் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகிப் பரிநாசமான போது யப்பானிய மக்கள் அதிலிருந்து நிமிர்ந்தெழும் வீரியத்தை வெளிப்படுத்தியதனால் இன்று உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாய் உள்ளனர். நாகரீகங்களின் எழுச்சி அவை சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதங்களிலேயே அமைகிறது. இயற்கை விடும் சவால்கள் ஆயினும் சரி, சக மனிதனால் எழும் சவால்கள் ஆயினும் சரி சவால்களை எதிர்கொள்வதிலேயே அதன் வரலாற்று வெற்றி அமைகின்றது.

இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகளாய் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றனர். ஆதலால் இத்தோல்விகளுக்கான காரணங்களை உள்ளும், புறமும் திறந்த மனதுடன் தேடிக் கண்டறிய வேண்டும். இராமநாதன்களும் தோல்வி கண்டனர், அருணாச்சலங்களும் தோல்வி கண்டனர், பேரின்பநாயகங்களும் தோல்வி கண்டனர், பொன்னம்பலங்களும் தோல்வி கண்டனர், செல்வநாயகங்களும் தோல்வி கண்டனர், அமிர்தலிங்கங்களும் தோல்வி கண்டனர், இறுதியாக பிரபாகரன்களும் தோல்வி கண்டனர். இந்த ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தோல்விகள் மட்டுமல்ல, இதற்கு முற்பட்ட நூற்றாண்டுகளும் தோல்விகளின் கதை கூறும் நூற்றாண்டுகளாகவே உள்ளன. ஆதலால் இத் தோல்விகளுக்கான காரணங்களை நீண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து கண்டறிவதன் மூலமே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நாம் போக முடியும்.

பேமியூடா முக்கோணம் அல்லது பிசாசின் முக்கோணம் (Bermuda Triangle or Devils Triangle) ‐ வடமேற்கு அத்திலாந்திச் சமுத்திரத்தில் மியாமி, பேமியூடா போட்டறிக்கா ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கோணப்பகுதி. இப் பகுதியில் விமானங்களும் கப்பல்களும் மாயமாய் மறைந்து போனதாகக் கூறப்படுவதிலிருந்து பிரபலமான இச் சொற்தொடர் அரசியல் அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது.) எனப்படும் சிங்கள அரசியல் வியூகத்துக்குள் தமிழ் வரலாறு மாயமாய் விழுங்கப்பட்டுச் செல்வதன் மர்மத்தை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. சிங்கள அரசியல் இராஜதந்திரமானது உள்நாட்டு இனங்கள் சார்ந்த அரசியல் சக்திகளையும், அயல்நாட்டு அரசியல் சக்திகளையும், சர்வதேச அரசியல் சக்திகளையும் மிக லாவகமாக கபளீகரம் செய்து தன்னை தக்கவைக்கும் மாய வல்லமை கொண்டது.

அழியப் போகின்றது என்று தோன்றும் தருணத்தில் அது நிமிர்ந்தெழும் இராஜதந்திரத் திறனை சிங்கள அரசியல் எப்போதும் வெளிப்படுத்தியுள்ளது. கெட்டுப் போய்விட்டது என்று தோன்றும் ஒன்றை உருமாற்றம் செய்து புதுப்படைப்பாய் காட்சி அளிக்கும் வல்லமையும் சிங்கள அரசியல் வரலாற்றுக்கு உண்டு. அரச இயந்திரம் சேலை அணிவதில்லை. ஆதலால் அரசுக்கு வெட்கம் என்று ஒன்று எந்தவொரு நாட்டிலும் இருப்பதில்லை. இப்போது இலங்கை பற்றிப் பேசப்படும் மனித உரிமை மீறல்கள் எனும் குற்றச்சாட்டை களைய அக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசுகளை அணைப்பதன் மூலம் அக்குற்றச்சாட்டுக்களை போர்த்து மூடக்கூடிய இராஜதந்திரப் போர்வை சிங்கள இராஜதந்திரிகளிடம் உண்டு.

வரலாற்றுப்பாடம்:

1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்பளைக் கலகத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகும் வகையில் இராமநாதன் நடந்து கொண்டதன் மூலம் இஸ்லாமிய மக்களின் மனங்களை அவர் புண்படுத்தினார் என்ற உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். இங்கு ஒரு தமிழ்த்; தலைவரை அரவணைத்து இஸ்லாமிய மக்களை எதிர்கொண்ட அதேவேளை தாம் அரவணைத்த அதே தமிழ்த் தலைவரை மடக்கி வீழ்த்திய திறனையும் சிங்களத் தலைவர்கள் ஒரே வேளையில் வெளிப்படுத்தினர் என்ற மறு உண்மையையும் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இராமநாதனை தேரில் வைத்து ஊர்வலமாய் இழுத்து வந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை அதே தேர்ச்சில்லால் நசித்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் சிங்கள இராஜதந்திரத்தை புரிவதற்கு வேறு பாடப் புத்தகங்கள் தேவைப்படாது.

சிங்களத் தலைவர்களிடம் தோல்வி கண்ட இராமநாதன் சிங்களத் தலைவர்களை நம்பி அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டாம் என்று அவரது சகோதரனாகிய அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசை ஆரம்பிக்க முற்பட்ட வேளையில் அவருக்கு ஆலோசனை கூறியதாக ஒரு கூற்று உண்டு. தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தனது அந்திம காலத்தில் தந்தை செல்வா கூறிய கூற்றிலும் அவர் தோல்வியடைந்தமை பற்றிய பரிதாபமே வெளிப்படுகின்றது. இவ்வாறு தோல்வியின் கதை ஒருபுறம் நீண்டு நெடுத்துச் செல்லும் போதும் தமிழ் பேசும் மக்களிடம் இலட்சியப் பிடிப்பின் வரலாறு குன்றிச் செல்லவில்லை.

தமிழ் பேசும் மக்களின் இலட்சியப் பிடிப்பு:

தமிழ் பேசும் மக்கள் தமது இலட்சியப் பிடிப்பை ஒரு போதும் கைவிடாது தொடர்ந்து உறுதியுடன் பேணிவரும் வரலாற்றையே நாம் காணமுடிகிறது. முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையை 1918 ஆம் ஆண்டு சேர்.பொன்.அருணாசலம் முதல் முறையாக முன்வைத்தார். ஆனால் இலங்கையின் சுதந்திரம் தமிழருக்கு அந்நியமாய்ப் போனது. 1920 களின் மத்தியில் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் சுதந்திர வேட்கையுடனும், சமூக முன்னேற்றம், இன நல்லிணக்க நோக்கத்துடனும் இலட்சிய பூர்வமாய் போர்க்களம் குதித்தது. இலங்கையின் வரலாற்றில் பொறுப்பாட்சி கோரி நேரடிப் போராட்டத்தில் முதல் முறையாக ஈடுபட்ட பெருமையை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் கொண்டுள்ளது.

இதன் பின்னான காலங்களில் தெளிவாகவே இலங்கையின் வரலாறு இன முரண்பாட்டின் வரலாறாக தொடர்ந்து நேர்கணியப் பாதையில் பிரயாணிப்பதாயிற்று. ஆனால் இவ்வேளையில் தமிழ் பேசும் மக்கள் இன ஒடுக்கு முறைக்கு எதிராக தம் தலைவர்களின் அழைப்பை ஏற்று பின் செல்ல ஒரு போதும் தயங்கவில்லை. தமிழ்த் தலைவர்கள் அழைப்பு விடுத்த போதெல்லாம், தம் தலைவர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டு நின்ற வரலாற்றையே நாம் முழு நீளமாய் காணமுடிகிறது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி நேரடிப் போராட்டத்திற்கு அழைப்பு விட்ட தருணங்களில் எல்லாம் தமிழ், முஸ்லிம் மக்கள் திரண்டு அவர்கள் பின்னால் சென்ற வரலாற்றை எவ்வாறு மறக்கமுடியும்? இலங்கை வரலாறு முன் எப்பொழுதும் கண்டிராத மக்கள் திரளின் வரலாற்று எழுச்சியை 1961 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் அழைப்பின் போது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வெளிப்படுத்தினர். மேற்படி சத்தியக்கிரக போராட்டத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள் வெளிக்காட்டிய ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பங்களிப்பையும் வசதியாகவே சிலர் மறந்துவிடுவது வேதனைக்குரியது. ஒரு போதும் மக்கள் போராடத் தயங்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் தமது நேரடிப் பங்களிப்பை ஆற்றவும் தவறவில்லை.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைத்த போது அவர் பின்னால் தமிழ் பேசும் மக்கள் இரண்டு தசாப்தங்களாய் ஒன்று திரண்டு நின்றனர். அதன் பின்பு தந்தை செல்வா அழைத்த போது இரண்டு தசாப்தங்களாய் அவரின் பின்னாலும் கைகட்டிச் சென்றனர். அடுத்து அமிர்தலிங்கம் அழைத்த போதும் அவரின் பின்னாலும் ஒரு தசாப்தம் அணிவகுத்து நின்றனர். இதன் பின்பு ஆயுதப் போராட்ம் என இளைஞர் இயக்கங்கள் தோன்றிய போது முழு நீள அர்ப்பணிப்புடன் சொத்து, சுகம், உயிர் என்பவற்றை இழந்தும்; அவர்கள் பின் செல்லத் தயங்கவில்லை.

எப்படிப்பட்ட தேர்தல்களின் போதும் தம் உரிமையின் மீதான பற்றுதியை மக்கள் ஒரு போதும் கைவிட்டதில்லை. மக்களை நம்புங்கள்; மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்ற வாக்கியம் மிகவும் சரியானது. மக்களை நம்ப மறுப்பதும், மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளத் தவறுவதும் வரலாற்றுப் படிப்பனையிலிருந்து பாடங்களை பெற்றுக் கொள்ளத் தவறுவதும் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களாகும். இப்போது தமிழ் பேசும் மக்களின் எண்ண உணர்வுகளைப் புரிந்து கொண்டு மக்களை முதன்மைப்படுத்தி அவர்களின் அடகு வைக்கப்பட முடியாத உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் பேசும் தலைவர்களுக்கு உண்டு.

அரசியல் தலைமைத்துவப் பண்பு:

தோல்விகளையும், பின்னடைவுகளையும் காரணம் காட்டி புறமுதுகிடுவது தலைமைத்துவம் ஆகாது. தலைமை என்பது தன் சூழலுக்கு ஏற்ப புதுமெருகுடன் நிமிர்ந்தாக வேண்டும். தோல்விகளை காரணம் காட்டி, மக்களை குறை கூறி வரலாற்றை முன்னெடுக்கும் பொறுப்பில் இருந்து ஒரு சமுகத்தின் முன்னணி மாந்தர் பின்வாங்கக் கூடாது. சோதனைகள் வருவது சாதனைகளை நிலைநாட்டவே என்ற திடசித்தத்துடன் புத்திபூர்வமாய் முன்னேறி ஆகவேண்டும். தைரியத்தையும், தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்த வேண்டிய காலம் இது. நெருக்கடிகளே உன்னதங்களை தோற்றுவிக்கின்றன. ஆதலால் உன்னதங்களுக்கு தயாராகுமாறு நெருக்கடிகள் வாயிலாக வரலாறு எமக்கு கட்டளையிடுகிறது.

தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்தி தமது உரிமைகளையும் சளையா மனத்தையும் வெளிப்படுத்துவதுடன் தம்மை ஒரு சக்தியாய் உருத்திரட்டி காட்ட வேண்டிய கட்டாயம் வரலாற்றில் எழுந்துள்ளது. துவண்டு விட்டோம் என்றில்லாமல் ஒரு தலையாய் எழப் புறப்பட்டுவிட்டோம் என்பதை நாற்திசையும் ஒலிக்க வேண்டிய தருணம் இது.

இதனால், தமிழ் பேசும் மக்களின் சார்பாக ஒரு பொது வேட்பாளர் நிறுத்துதில்லை என்ற முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருப்பின் அதனை மறுபரிசீலனை செய்யக் கோருகிறோம். தற்போதய காலகட்டத்தில,; தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய பாத்திரம் உண்டு. தமிழ் பேசம் மக்களின் ஒருமைப்பாட்டைப் பேணி, அவர்களை அணிதிரட்டி அரசியல் சக்தியாக உருத்திரளச் செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள வரலாற்றுப்பணியாகும். தமிழ் பேசும் மக்களை வடக்கு, கிழக்கு என பிரதேச ரீதியாக கூறு போட முனையும் சிங்களத்தின் சூழ்ச்சிகளையும் முறியடித்து முன்னேற வேண்டிய காலமிது. தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாடு என்ற கோசத்தை முன்னிறுத்தி தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கி மக்கள் மத்தியில் செல்வோம். மக்கள் அணிதிரண்டு வருவார்கள். இ;க் கோரிக்கையையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தமது கவனத்திற் கொள்வார்கள் என நம்புவோம்.

தமிழ் பேசும் மக்களின் சார்பாக ஒரு பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான முடிவை எடுப்பதற்கு நமக்கு 3 நாட்கள் கால அவகாசமே உண்டு. விரைந்து முடிவெடுத்து முதலாவது வாக்கை எமது ஒருமைப்பாட்டின் சின்னமாக்குவோம். அடுத்து, மாற்று வாக்கை எப்படி பிரயோகிப்பது என்பதை அரசியல் தந்திரோபாய தேவை கருதி சிந்திக்க மேலும் நாற்பது நாள் அவகாசம் எமக்கு உண்டு.

செல்வராஜா தனபாலசிங்கம். (globaltamilnews.net)

இக்கட்டுரையாளருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி: stbalasingham1956@googlemail.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply