தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது : நிலாந்தன்
கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார்.
ரகுராம் தெளிவான துணிச்சலான நிலைப்பாடுகளை முன்வைத்துப் பேசினார். “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற தீர்வு முன்மொழிவை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் முன் வைத்தார்.தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் பேசினார்.
ஒரு கட்சி மேடையில், நிகழ்த்தப்பட்ட நினைவுப் பேருரை என்ற அடிப்படையில்,அவருடைய உரை அதிகம் ஜனரஞ்சகமானதாகவும் அழுத்தமானதாகவும் இருந்தது.அந்த நினைவுப் பேருரை துணிச்சலாகவும் தெளிவாகவும் சில விடயங்களை முன்வைக்கின்றது. எனினும் அது அதற்கு அந்த வழங்கப்பட்ட தலைப்புக்கு வெளியே வந்துவிட்டது.
அந்தப் பேருரைக்கு வழங்கப்பட்ட தலைப்பு “மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல்”.ஆனால் தமிழ் அரசியலை குறிப்பாக, என்பிபி அரசாங்கத்தின் எழுச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியலை,அதைவிடக் குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய ஆசனங்கள் மேலும் குறைந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில், தமிழரசியலை மக்கள் மயப்படுத்துவது தொடர்பான விடயங்கள் அந்த உரைக்குள் வரவில்லை.
அந்த உரையை ஒழுங்குபடுத்திய முன்னணி மட்டுமல்ல,தமிழரசுக் கட்சியுமுட்பட ஏனைய எந்த ஒரு கட்சியிடமாவது மக்களை அரசியல் மயப்படுத்தும் அரசியல் தரிசனங்கள்; உபாயங்கள் உண்டா? மிகக் குறிப்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் எல்லாக் கட்சிகளும் ஆயுதப் போராட்ட பாரம்பரியத்தில் வந்தவை. அதிலும் இடதுசாரி பாரம்பரியத்தில் வந்த கட்சிகள் உண்டு. அந்தக் கட்சிகள் எந்தளவுக்கு இடது மரபின் அடிப்படையில் கட்டமைப்புகளை உருவாக்கி மக்கள் மத்தியில் வேலை செய்திருக்கின்றன ?
ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் மக்கள் போதிய அளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியாது. ஆனால் பொது எதிரிக்கு எதிரான இன உணர்வுகள் அங்கே திரட்டப்பட்டன.ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு இனமாக மக்களைத் திரட்டுவது அப்பொழுது இலகுவாக இருந்தது. ஒடுக்கு முறைக்கு எதிரானது என்ற விடயத்தில் தமிழ் மக்கள் ஓரளவுக்குத் தெளிவாக இருந்தார்கள். இப்பொழுதும் இனரீதியாக சிந்திக்கும் பொழுது தமிழ் மக்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியலை அதன் ஆழமான அறிவியல் தளத்தில் விளங்கி வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?
தேசியவாத அரசியல் என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாகத் திரட்டுவது. அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாகத் திரட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் விடயங்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதாவது கட்டமைப்புச் சார்ந்து -ஸ்ட்ரக்சரலாக-சிந்திக்க வேண்டும். ஆனால் தமிழ் அரசியலில் மட்டுமல்ல தமிழ் அன்றாட வாழ்விலும் கட்டமைப்பு சார்ந்த சிந்தனைகள் குறைவு.
நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒர் உதாரணம் உண்டு. தமிழ் மக்கள் வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்திரம் பார்ப்பார்கள். ஏனென்றால் மதரீதியான நம்பிக்கைகளுக்கு அவர்கள் அதிகம் பயம். ஆனால் வாஸ்து முறைப்படி வீட்டைக் கட்டும் தமிழர்களில் எத்தனை பேர் அதன் அழகியல் மற்றும் துறை சார் அம்சங்கள் தொடர்பாக உரிய துறைசார் நிபுணர்களை அணுகுகிறார்கள்? துறை சார் நிபுணத்துவ அறிவைக் கொண்ட கட்டிடப்பட கலைஞர்கள் வீட்டின் மொத்த பெறுமதியில் ஒரு விகிதத்தைக் கேட்பார்கள் என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டிடப்படக் கலைஞரால் கற்பனை செய்யப்பட்ட ஒரு வரைபடத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டே வீட்டைக் கட்டத் தொடங்க வேண்டும். ஆனால் எனது நண்பர் ஒருவர் கூறுவது போல “மேசன்தான் ஆர்க்கிரக்ட்; மேசன் தான் ஸ்ட்ரக்சரல் இன்ஜினியர்;மேசன் தான் எல்லாமே ” என்ற ஒரு நிலைமை தான் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் உண்டு. இதில் தனிப்பட்ட வீடுகள் மட்டுமல்ல பொதுக் கட்டிடங்களும் அடங்கும்.கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணத்துவம், பண்பாடு சார்ந்த துறை சார் நிபுணத்துவம், மற்றும் அழகியல் அம்சங்கள் தொடர்பான துறைசார் நிபுணத்துவம் போன்றவை கவனத்தில் எடுக்கப்பட்டுக் கட்டப்பட்ட வீடுகள் எத்தனை?
இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வீடு கட்டும் பொழுது, அவர்களிடம் போதிய பணம் இருப்பதினால்,வீட்டைக் கட்டும் வேலையை கொண்ட்ராக்ட் கொம்பெனிகளிடம் கொடுக்கிறார்கள்.கொம்பனிகளிடம் துறை சார் நிபுணத்துவம் உண்டு. அதனால் இப்பொழுது கட்டப்படும் வீடுகளில் ஓரளவுக்கு கலைநயம் காணப்படுகிறது. தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் விவகாரங்களை ஸ்ட்ரக்சரலாக அதாவது கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் போக்குப் போதாமல் இருக்கிறது.இது தமிழ் கட்சிகளுக்குள்ளும் காணப்படுகின்றது.
இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தேவையான கட்டமைப்புக்களை எத்தனை கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன? குறிப்பாக எத்தனை கட்சிகளிடம் மாணவ அமைப்புகள் உண்டு? என்பிபி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவ அமைப்புகளுக்குள் அங்கு படிக்கும் தமிழ் மாணவர்களை இணைத்து வருகிறது.இவர்கள் தமிழ் பகுதிகளில் என்பிபிக்காக வேலை செய்து வருகிறார்கள். “மாணவர்கள் போராட்டத்தின் கூர்முனை- spear head ” என்று பிரான்சிஸ் பனன் கூறுவார்.ஆனால் அந்தக் கூர்முனை கூர் முனையை ஒடுக்கு முறைக்கு எதிராக ஒரு தவிர்க்கப்படவியலாத போராட்ட சக்தியாக மாற்றுவதற்கு ஒரு அரசியல் இயக்கம் வேண்டும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவ்வாறு அரசியல் இயக்கங்களால் வழிநடத்தப்பட்ட மாணவர் போராட்டங்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன.
கட்சிகளிடம் அவ்வாறான கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில், சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர்கள்; காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கங்கள் போன்றவற்றை தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப கையாள முற்படும் போக்கு முன்பு அதிகமாக இருந்தது. இப்பொழுதும் ஆங்காங்கே இருக்கிறது.
மாணவ கட்டமைப்புகள் மட்டுமல்ல மகளிர் கட்டமைப்புகள் ; தொழில்சார் கட்டமைப்புகள்; உதாரணமாக கடல் தொழிலாளர் கட்டமைப்புகள்; கூட்டுறவுக் கட்டமைப்புகள்; விவசாயிகள் கட்டமைப்புகள், என்று பார்த்தால் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்டத் தேவையான பல்வேறு கட்டமைப்புகளையும் தமிழ்க் கட்சிகள் கட்டியெழுப்பி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. ஏன் அதிகம் போவான்? தமது கட்சித் தொண்டர்களை அரசியல் மயப்படுத்தும் கட்டமைப்பு எந்தக் கட்சியிடம் உண்டு?
அதேசமயம் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியானது இடதுசாரி ஒழுக்கத்தில் வந்த ஒரு கட்சி என்ற அடிப்படையில் அவர்களிடம் அவ்வாறான கட்டமைப்புகள் உண்டு. தேசிய மக்கள் சக்திக்குள் பேராசிரியர் ரகுராம் கூறியது போல மிகச் சிலர்தான் முடிவெடுக்கும் அதிகாரத்தோடு இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த முடிவுகள் கட்டமைப்புகளுக்கு ஊடாக மக்கள் மயப்படுத்தப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் கட்டமைப்புகளை முன்னுதாரணமாக கொண்டு தமிழ்க் கட்சிகள் செயல்பட வேண்டும் என்று நான் இங்கு கூற வரவில்லை. ஆனால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் தங்களுக்கு பொருத்தமான கட்டமைப்புகளை போதிய அளவுக்கு உருவாக்கியிருக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கம்.ஆயுதப் போராட்டம் கட்டமைப்புகளை உருவாக்கியது. ஆனால் தமிழ் மிதவாத அரசியலில் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறான கட்டமைப்புக்கள் போதிய அளவுக்கு உருவாக்கப்படவில்லை.ஏனென்றால் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தேச நிர்மானம் தொடர்பாகவும் தேசியவாத அரசியல் தொடர்பாகவும் பொருத்தமான, நடைமுறைச் சாத்தியமான அரசியல் தரிசனங்கள் இல்லை.
தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரளாக கூட்டிக் கட்டுவது என்ற அடிப்படையில் சிந்தித்தால்,மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுதான் தேசியவாத அரசியலாகும். ஆனால் கடந்த சுமார் ஐந்து ஆண்டு காலப் பகுதிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தையிட்டியில் நடத்திவரும் போராட்டங்களைப் பார்த்தால் அது எங்கே நிற்கிறது என்று தெரியவரும். ஒவ்வொரு முழுநிலா நாளின் போதும் முன்னணி தையிட்டியில் ஒரு போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.ஆனால் ஒரு கட்சியாக அதன் முக்கிஸ்தர்களில் ஒரு சிறு தொகைதான் எப்பொழுதும் அங்கே காணப்படும்.அது ஒரு மக்கள் மயப்படாத, சிறுதிரள்,கவன ஈர்ப்புப் போராட்டம்.அதை மக்கள் மயபட்டதாக மாற்றவேண்டும் என்று தரிசனம் அந்தக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதை ஏன் மக்கள் மயப்படுத்த முடியவில்லை? அல்லது அதை எப்படி மக்கள் மையப்படுத்துவது? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடிச் சென்றால், முன்னணி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய அரசியலும் ஒரு புதிய தடத்தில் பிரவேசிக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply