ஜனாதிபதித் தேர்தல் பற்றி புதிய ஜனநாயகக் கட்சியின் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்க வேண்டும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை நிராகரித்து ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முப்பத்தியொரு வருடமாக இருந்து வரும் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரான தமது வெறுப்புணர்வையும் எதிர்ப்பையும் அனைத்து மக்களும் குறிப்பாகக் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை புதிய ஜனநாயகக் கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக நிறைவேற்றியது.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி மேற்கொள்வேண்டிய நிலைப்பாடு பற்றி விவாதித்த மத்தியகுழு மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்டது. இத்தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கடந்த 31 வருட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இந்த நாடும் மக்களும் பல்வேறு நிலைகளில் பொருளாதார நெருக்கடிகளையும், அரசியல் அடக்குமுறைகளையும், அநீதிகளையும், அழிவுகளையும் துன்ப துயரங்களாக அனுபவித்து வந்துள்ளனர். மூன்று தசாப்தகால பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தவற்றில் இவ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது முதலிடம் வகித்து வந்துள்ளது.

யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. 30 வருடங்களுக்குப் பின்பு தமிழ் மக்களின் இரத்த வெள்ளத்தில் யுத்தத்தை முடித்து வெற்றி விழா கொண்டாடி நிற்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அதேவேளை யுத்த களத்தில் கொடூர யுத்தத்தை முன்னெடுத்து வந்தவர் இராணுவ ஜெனரலான சரத் பொன்சேகா. ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் பொன்சேகாவும் இணைந்தே இறுதி யுத்தத்தை முன்னெடுத்தனர். இவர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் இருவருமே இந்நாட்டின் உழைக்கும் மக்களினதும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களினதும் அடிப்படை அபிலாசைகளை நிறைவேற்றத் தக்கவர்கள் அல்லர். இருவருமே தேசிய இனப்பிரச்சினைக்கு மனப்பூர்வமான தீர்வை வழங்கத் தயார் இல்லாத பேரினவாத நிலைப்பாடு கொண்டவர்களாகவே உள்ளனர்.

இவர்களில் ஒருவரை நல்லவர் எனத் தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பதென்பது அரசியல் விவேகமற்ற செயல் மட்டுமன்றி மக்கள் தமது தலைகளுக்குத் தாமே மீண்டும் மண் அள்ளிப் போடுவதாகவே அமையும்.

இரண்டு பேரினவாதக் கட்சிகளின் சார்பாக நிற்கும் இவ்விரு பிரதான வேட்பாளர்களுக்கும் அடக்கப்பட்டு வரும் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்ற கேள்வியையே எமது புதிய ஜனநாயகக் கட்சி கேட்கின்றது. அதற்கு அப்பாலான கட்சிகளுக்கு வாக்களிப்பதானது அர்த்தமற்றதொன்று என்பதுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பபைத் திசைதிருப்பவும் மறைமுகமாகப் பிரதான வேட்பாளர்களுக்கு உதவுவதாகவும் அமையக் கூடியதாகும்.

மேலும் அவ்வறிக்கையில் இவ் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி தலைமையிலான இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராகத் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தனியொரு வேட்பாளரை நிறுத்தி 50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும். அத்துடன் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்கும். இதனையே எமது கட்சி ஏற்கனவே முன்வைத்து வந்தது.

ஆனால் அதனைக் கவனத்தில் கொள்ளாது பிரதான வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முன்னிற்கும் சிறுபான்மை கட்சிகள் தத்தமது பதவிகளுக்கும் ஏதிர்காலப் பாராளுமன்றச் சுயநல அரசியலுக்குமாக மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தையே செய்து நிற்கிறார்கள். இது கடந்த காலங்களின் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியலின் தொடர்ச்சியேயாகும். கடந்த 30 வருட யுத்தத்தில் சுமார் இரண்டரை லட்சத்திற்கு மேலான தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிவுற்றுள்ளன. பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததுடன் இறுதியில் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அகதிகளாகினர். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகள், அவலங்களின் துயர நிலைகள் இன்னும் மாறவில்லை.

இந்நிலையில் இக்கொடிய யுத்தத்திற்கும் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கும் அழிவுகளை ஏற்படுத்திய பிரதான இரு வேட்பாளர்களுக்கும் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும். அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியில் சுமார் ஒன்றரை இலட்சம் பேரை ஏற்கனவே பலியெடுத்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஆட்சிமுறையும் இதே சர்வாதிகார ஜனாதிபதி முறையேயாகும். எனவே இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையையும் அதன் கொடூரமான அதிகாரங்களையும் பதவிக்கு வரும் எவரும் வெறும் தேர்தல் வாக்குறுதிக்காக மனமுவந்து கைவிட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருவார்கள் என்பது வெறும் பகற்கனவேயாகும்.

எனவே இவ் ஜனாதிபதித் தேர்தலில் அம்முறைமைக்கும் அதில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கும் எதிரான தமது வெறுப்பையும் எதிர்ப்பையும் மக்கள் காட்டுவதற்கு உள்ள ஒரு சந்தர்ப்பம் இத் தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும். அதன் மூலம் மக்கள் தமது அரசியல் பலத்தையும் வெகுஜனப் போராட்ட மார்க்கத்தையும் மாற்று அரசியலாக முன்னெடுக்க முடியும் என்பதே எமது கட்சியின் வேண்டுகோளாகும்.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
17.12.2009

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply