மன்னாரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்த பாடில்லை

மதவாச்சி சோதனைச்சாவடி பொது போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளபோதிலும் மன்னாரில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தவொரு பொருட்களுக்குமான விலைகள் இதுவரையிலும் குறையடையவில்லை என மன்னார் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்தம் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கான அனைத்து போக்குவரத்துக்களும் மதவாச்சி சோதனைச்சாவடியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாட்டின் தென்பகுதியிலிருந்து மன்னாரிற்கு எடுத்துவரப்படுகின்ற அனைத்துவிதமான பொருட்களும் மதவாச்சி உள்ளிட்ட பலபகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஏற்றி இறக்கப்பட்டே மன்னாரை வந்தடைந்தது.

ஆயினும் தற்போது மன்னாரிலிருந்து நாட்டின் தென் பகுதிக்கான போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டிருக்கின்ற போதும் மன்னாரில் மக்கள் பொருட்களை; இருமடங்கு விலைகொடுத்தே வாங்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

மன்னாரில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் உணவுப்பண்டங்களுக்கும் பெரிதும் தட்டுப்பாடு நிலவுவதுடன் அவைகள் கொள்ளை விலைக்கும் விற்கப்பட்டு வருவதது குறித்து மக்கள் பெரிதும் கவலையடைந்திருக்கின்றனர்.

இது இவ்வாரிருக்க, உள்ளுரில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப்பொருட்களும் உள்ளுர் சந்தைகளில் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இங்கு கோழி இறைச்சி கிலோ ஒன்று ரூபாய் 450 தொடக்கம் 500வரையும், இறைச்சி கிலோ ஒன்று ரூபாய் 350 தொடக்கம் 400 வரையிலும் விற்பனையாவதோடு இவைகளுக்கு தொடர்ந்தும் பாரிய தட்டுப்பாடும் நிலவுகின்றது.

அதே போல் கடல் உணவு வகைகளில் கணவாய், இறால், நண்டு என்பன ரூபாய் 500 வரையிலும் மீன் வகைகள் ரூபாய் 400 வரையிலும் விற்பணை செய்யப்படுவதோடு மரக்கறி வகைகள் ரூபாய் 150 வரையிலும் விற்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்மையில் அரசாங்கத்தினால் விலைகுறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஐந்து உணவுப் பண்டங்களின் விலைகள் கூட மன்னாரில் இதுவரையிலும் குறைக்கப்பட்டிரப்பதாக தெரியவில்லை எனவும் தெரிய வருகின்றது.

இது இவ்வாரிருக்க உணவு விடுதிகளில் உணவுப் பண்டங்கள் மிக அதிக விலைக்கே விற்கப்படுகின்றன. பிறியாணி ரூபாய் 400, மீன் பார்சல் ரூபாய் 150, இறைச்சிப்பார்சல் ரூபாய் 450, மரக்கறிப் பார்சல் ரூபாய் 125, மசாலா தோசை ஒன்று 100ரூபாய், சாதா தோசை ஒன்று ரூபாய் 60, கட்லட் ஒன்று ரூபாய் 30, வடை ஒன்று ரூபாய் 20, கட்லிஸ் ஒன்று ரூபாய் 20 என்ற விலைக்கு விற்கப்படுகின்றன. விலைவாசி அதிகரித்துச்செல்லும் அதேவேளை உணவுப்பொருட்களின் அளவு குறுகிக்கொண்டே செல்வதாகவும் நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடமை ஆற்றுகின்றனரா இல்லையா என்பதுகூட தெரியாமலேயே இருக்கின்றது என்கின்றனர் அரசு ஊழியர்கள் கூட.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply