இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் தெரிவித்ததாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை : இராதாகிருஷ்ணன்

இந்திய பட்டதாரி ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று மற்றும் இணையத்தலங்ளில் வெளிவந்துள்ள செய்தியில் உண்மை இல்லை என வே, இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் நான் ஆற்றிய உரையை சரியாக புரிந்துகொள்ளாமல் இணையத்தலங்களில் தவறாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதாவது, நான் எனது உரையின்போது, 2017ஆம் ஆண்டு நான் பிரதி கல்வி அமைச்சராக இருக்கும்போது பெருந்தோட்ட பாடசாலைகளில் காணப்படும் முக்கியமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இந்தியாவில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதனால் நாங்கள் அந்த நடவடிக்கையை கைவிட்டோம் என்றே தெரிவித்திருந்தேன்.

ஆனால் ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டுவரவேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நான் தெரிவித்த கருத்துக்கு மாறுபட்ட கருத்தாகும்.

அதேபோன்று இணையத்தளங்களிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் சமூக வலைத்தலங்களில் எனக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே நான் தெரிவித்த விடயத்தை தலைகீழாக மாற்றி பிரசுரித்தமைக்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply