தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழப்பு
தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இயங்கிவந்த 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இயந்திர செயலிழப்புத் தொடர்பில் புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் கதிரியல் சிகிச்சைப் பிரிவில் இயங்கிவந்த 5 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக கதிரியல் சிகிச்சைக்காக பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 250 நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் முடங்கியுள்ளது. மேற்படி இயந்திரங்கள் கடந்த வாரம் 7 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று செயலிழந்துள்ளன.
தற்போது இயந்திரங்கள் செயலிழந்து ஒரு வாரம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. எனினும் உரிய அதிகாரிகளால் இயந்திரங்களை பழுதுப்பார்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. புற்றுநோயாளர்களுக்கான கதிரியல் சிகிச்சைகளை ஆரம்பித்து அவற்றை இடைநடுவே நிறுத்துவதன் மூலம் நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக 10 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் மாத்திரமே உள்ளன. அவற்றில் 5 இயந்திரங்கள் தேசிய புற்றுநோய் வைத்தியசாலையிலும், இரண்டு இயந்திரங்கள் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் உள்ளன. மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் காலி தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த 10 இயந்திரங்களும் அடிக்கடி செயலிழப்பதை காணக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் தொழிற்சங்கம் என்ற ரீதியில் சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ள போதும், அமைச்சு அதை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. எவ்வாறெனினும் இந்த இயந்திரங்கள் முழுமையாக பழுதுப்பார்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply