கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னரே வன்முறைகள் அதிகம்: மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்
கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு, அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் மாகாணத்தில் சமாதானமும், சாதாரண வாழ்க்கை நிலையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சமூக மக்களும் மகிழ்ச்சியடைந்தனர் எனக் குறிப்பிட்ட அவர்,
எனினும், அண்மைக் காலமாக அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் மோசமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறினார்.
உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்” என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள் அதிகரித்திருப்பதால் முன்னர் மக்கள் எவ்வாறு பயத்தில் இருந்தார்களோ அவ்வாறான மனநிலையிலேயே தற்பொழுதும் கிழக்கு மக்கள் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சரும், மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவும் கிழக்கில் தோன்றியிருக்கும் வன்முறைச் சூழ்நிலையின் பாதிப்பை உணர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் கைகளில் போதியளவு அதிகாரம் இல்லாமையால் அவர்கள் பொதுமக்களின் உதவியுடன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அவர்களால் எதனையும் செய்யமுடியாதுள்ளது, ஏனெனில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. விநாயகமூத்தி முரளீதரனை (கருணா) கிழக்கு மாகாண வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply