சரத்தின் கருத்துக்களால் இராணுவத்துக்கு வெளிநாடுகளில் அச்சுறுத்தல்

சரத் பொன்சேகாவின் கருத்துக்களினால் எமது இராணுவம் இன்று சர்வதேச நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுமளவுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதென அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது போன்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் மிகமோசமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் இன்றைய சூழலில் நாட்டை முன்னேற்றும் வகையிலேயே அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. இதற்கு நாட்டின் புத்தாக்குனர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை புத்தாக்குனர்களைக் கெளரவிக்கும் தேசிய வைபவமொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகைளில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையிலுள்ள பல புத்தாக்குனர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்று தமது பெறுமதிமிக்க சேவைகளை அந்நாடுகளுக்கு வழங்குகிறார்கள். இதனால் அந்நாடுகள் வளர்ச்சியடைவதுடன் இலங்கை போன்ற நாடுகள் அவர்களது சேவையை இழந்து வருகின்றன. இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண:-

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களான புத்தாக்குனர்களை மீள நாட்டுக்கு வரவழைத்து அவர்களுக்குரிய சலுகைகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரியா போன்ற நாடுகளில் இலங்கையர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் எம்மவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. அங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணம். நாமும் தொழில்நுட்பங்களை புத்தாக்கங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply