யாழ். தேர்தல் மாவட்டத்தில் 7 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என யாழ். தெரிவத்தாட்சி அலுவலர் க.கணேஷ் அறிவித்துள்ளார். இத்தொகை மதிப்பீடு 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. கணேஷ் தகவல் தருகையில், எதிர் வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 வாக்காளர்கள் யாழ். தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2008ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இத்தொகை மதிப்பீடு பெறப்பட்டது.

இது கடந்த முறையை விட 20 ஆயிரம் வாக்காளர்கள் அதிகமானதாகும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 11 தேர்தல் தொகுதிகளில் 624 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படும்.

இதற்கு மேலாக மருதங்கேணி ,தென்மராட்சி இராமாவில் நலன்புரி முகாம் மற்றும் தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்திலும் தற்காலிக வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படும் இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பு நிலையம் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

இடம்பெயர்ந்த மக்களிடமிருந்து இது வரை 2 ஆயிரத்து 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு 5 ஆயிரத்து 785 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் பிரகாரம் தபால் மூல வாக்காளர் இடாப்பு நாளை தயாரிக்கப்படும் என யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கணேஷ் குறிப்பிட்டார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply