1 1/2 இலட்சம் இடம்பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிக்க முடியாதென்ற குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் முற்றாக நிராகரிப்பு

மோதல் காரணமாக இடம் பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார்.

இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர்களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப் பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இடம் பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடாகப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களுக்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.

தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் இளைஞர், யுவதிகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாலும் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தாலும் பெரும்பாலான வன்னி மக்களுக்கு தமது அடையாள அட்டைகள், ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களை இழக்க நேரிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் தமது சகல உடை மைகளையும் கைவிட்டு புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்தது தெரிந்ததே.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டதையடுத்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க முதற்தடவையாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply