கூட்டமைப்பின் எட்டுக் கோரிக்கைகளையும் சரத் ஏற்றுள்ளாராம்

கடந்த 21ம் திகதி திங்களன்று சரத் பொன்சேகா மற்றும் ரணில் விக்கிரசிங்க உடன் ஜனாதிபதி தேர்தல் குறித்து நிகழ்ந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1. 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும்
2. வட கிழக்கில் உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல்
3. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல்
4. இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீள் குடியமர்வினை செய்தல்
5. மீள் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு
6. வடக்கு கிழக்கு மீள்கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல்
7. கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல்
8. அரசியல் தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக உறுதிப்பாடு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன. எழுத்து மூலமாக தந்தால் அதனை மகிந்த தரப்பு பகீரங்கபடுத்தினால் சிங்கள மக்களின் வாக்குகளில் சரிவு ஏற்படும் என பொன்சேகா தரப்பு கூறியுள்ளது. ஆனால் கூட்டமைப்பின் மும்மூர்த்திகள் தரப்பு தாம் இந்த எழுத்துமூலமான பத்திரத்தினை வெளியிட மாட்டோம் என்றும் ஆனால் சரத் பொன்சேகா வெற்றிபெற்று வாக்குறுதி நிறைவேற்றாப்படாவிட்டால் மட்டுமே சர்வதேசத்திற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளது. இதுபற்றி தாம் யோசிப்பதாக சரத்தும் ரணிலும் மும்மூர்த்திகளிடம் உறுதியளித்துள்ளனர். ஜனவரி 4ம் திகதிக்கு முன்பாக அந்த எழுத்துமூலமான பத்திரம் தரப்படவேண்டுமென மும்மூர்த்திகள் தரப்பு கேட்டுள்ளது.

இதே போன்றுதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவிடம் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் ரணில் விக்கிரமசிங்காவிடம் எழுத்து மூலமான உறுதிப்பாட்டினை கேட்டார். அதாவது ஜனாதிபதியாக வந்ததும் இடைக்கால அரசினை மையமாக வைத்து உடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமெனக் கேட்டிருந்தார். ஆனால் வாய் மூலம் ஆம் என கூறிய ரணில் இறுதிவரை அதனை எழுத்து மூலம் வழங்கவில்லை இதனாலேயே ரணில் தோற்றார் என்பதும் வரலாறு.

இப்போதும் அதே போன்ற நிலைப்பாடு வந்துள்ளது ஜனவரி 4ம் திகதி வரை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இதே வேளை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து உலக தமிழர் பேரவை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வை தெளிவாக சொல்பவர்களிற்கே ஆதரவு வழங்கவேண்டுமென கூட்டமைப்பினருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது. அதாவது வடக்கு கிழக்கு இணைப்பு , வட்டுகோட்டை தீர்மானம் என்பனவும் இதனுள் அடங்குமாம்.

ஆனால் சம்பந்தன் அவர்கள் இதனை ஏற்கவில்லை எனவும் முதலில் நடைமுறை பிரச்சினைகளை தீர்த்து மக்களை சோர்வில் இருந்து பிழைக்க வைக்கவேண்டும் அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் உலகத் தமிழர் பேரவை சொல்வதனை முன்வைக்கலாம் எனவும் பதிலளித்துள்ளார். சம்பந்தனின் இந்த கருத்திற்கு உலக தமிழர் பேரவையின் சில முக்கிய உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் பேரவைக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என தகவல்கள் கூறுகின்றன.

சில தினங்களுக்கு முன் ‘ரெலொ நியூஸ்’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் என ஒரு செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply