இனியாவது சரியான முடிவுகளை எடுப்பார்களா?
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26ம் திகதி. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல். இரண்டு தேர்தல்களும் தனித்தனியாக நடைபெறுகின்ற போதிலும் இரண்டுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு.
ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ள போதிலும் அவரது அதிகாரத்தைச் செயற்படுத்துவதில் பாராளுமன்றம் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. எனவே ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் போது அவருக்குச் சாதகமான பாராளுமன்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் செயற்படுகின்றன. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகப் பொன்சேகா கூறுகின்றார். எப்படியாகிலும் ஏப்ரல் மாதத்துக்கு முன் பாராளுமன்றத்தைக் கலைத்தாக வேண்டும். ஏப்ரல் மாதத்துடன் இப்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிகின்றது.
சரத் பொன்சேகா வெற்றியீட்டினால் அவருக்குச் சாதகமான பாராளுமன்றமும் அமைய வேண்டும். அப்படி அமையாவிட்டால் அவரால் செயற்பட முடியாது. எல்லாச் செலவுகளுக்கும் பாராளுமன்றமே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பாராளுமன்றம் அங்கீகரிக்காவிட்டால் அரச செலவினம் எதையும் மேற்கொள்ள முடியாது.
பொன்சேகாவுக்கு இப்போது ஆதரவளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பாராளுமன்றத் தேர்தலில் ஒரே அணியாகப் போட்டியிடப் போவதில்லை. ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடப் போகின்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சி அமைக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த நிலையில் சிறுபான்மையினர் தொடர்பாகப் பொன்சேகா அளிக்கும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது?
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அந்த ஆட்சியில் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் மனோ கணேசன் போன்றவர்கள் சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றார்கள். இது வீண் முயற்சி.
பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவுக்குச் செல்வாக்கு உண்டென்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக ஒருவரை நிறுத்தியிருக்கும். நாட்டில் ஆதரவு இல்லை என்பது தெரிந்ததாலேயே வேட்பாளரை நிறுத்தவில்லை.
இந்த விடயத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் பொன்சேகாவின் வாக்குறுதிகளில் மயங்கிப் போயிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாக் காலங்களிலும் பிழையான முடிவுகளையே எடுத்ததால் தமிழ் மக்கள் இன்று துன்பம் அனுபவிக்கின்றார்கள். பிழையான முடிவுகளை எடுப்பது இனியாவது முடிவுக்கு வரவேண்டும்.
இனிமேல் இவர்கள் எடுக்கும் முடிவாவது மக்களுக்கு நன்மை பயப்பதாக வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply