அரசாங்க மரியாதைகளுடன் அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை; தலவாக்கலைக்கு நேரில் சென்று ஜனாதிபதி அமைச்சருக்கு இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தலவாக்கலையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பொது மக்கள் இன்று பி. ப. ஒரு மணி வரை தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும்.

ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை அவரது குடும்ப அங்கத்தவர்களினால் இந்து சமய முறைப்படியிலான சமயக் கிரியைகள் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து பூதவுடல் நகர சபை மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூரண அரச மரியாதையுடனான இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

கொழும்பில் இருந்து தலவாக்கலைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடனுக்கு வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருந்த ஏராளமான மக்கள் மலர்கள் தூவியும், கண்ணீராலும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

பூதவுடல் நேற்று தலவாக்கலை, லிந்துலை புதிய நகர சபையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் தமது இறுதி அஞ்சலியை அன்னாருக்கு செலுத்தினர்.

இவரின் மறைவையடுத்து மலையகம் முழுவதும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு சோகமாக காட்சியளிக்கிறது.

பெரும்பாலான மக்கள் தோட்ட வேலைகளுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை புகையிரத நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், தனியார் வாகனங்களிலும், பஸ் வண்டிகளிலும் தலவாக்கலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஊவா மாகாணம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தோட்டங்களில் ம. ம. மு. யின் சிவப்பு, கறுப்பு நிறங்களிலான கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அமைச்சரின் உருவப் படங்கள் ஒவ்வொரு தொழிலாளர் குடியிருப்புக்களிலும் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

தோட்டங்களில் நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சிகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் முழுதும் சோகமான நிலை காணப்படுகின்றது.

மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதுடன், கடந்த சனிக்கிழமை தொடக்கம் வீடுகளில் முடங்கிப்போய்யுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் சனிக்கிழமை தொடக்கம் வேலைக்கு செல்லவில்லை.

இரத்தினபுரி, தெனியாய, காவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் தமது கட்சி பேதங்களை மறந்து தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply