தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர்

அவரது சொந்த தேர்தல் மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘ரெலோ நியூஸ்’க்கு தனது மனக் குமுறலைக் கொட்டித்தீர்த்தார்.

திருகோணமலை மாநகர சபை தலைவர் முகுந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கியமைக்கு ஒரு எதிர்வினையாகவே சம்பந்தர் இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க வைக்கும் முடிவை எடுக்க ஆரம்பம் முதல் ஒற்றை காலில் நின்றார் என்றார் தனது பெயரை வெளியிட விரும்பாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால் அடுத்த வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையில் மீண்டும் வெல்வதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க கூட்டமைப்பை சம்பந்தர் பலிக்கடா ஆக்கியுள்ளார். சரத் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அன்றி தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும் என்பதால் ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் இந்த தேர்தல் சூதாட்டத்தில் வைத்த விளையாட சம்பந்தர் துணிந்து விட்டார். ’தருமர்’ செயலை தட்டிக்கேட்க வக்கில்லாத ‘தம்பிகள்’ போல் நேற்றிரவு நடந்த நாடகத்தில் வாய் திறக்கா மெளனிகளானோம்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பங்கு கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள தலைமைப் பதவியில் இருப்பாராம் சம்பந்தர், இப்போது இருப்பது போல.

புலிகளுக்கு எப்படி கடந்த வருடம் மே-18 ஒரு இராணுவ முடிவாக இருந்ததோ அதேபோல் கூட்டமைப்புக்கு இந்த வருடம் ஜனவரி-26 ஓர் அரசியல் முடிவாக அமைந்து விடுமோ என மிகுந்த அச்சத்தில் இருக்கிறேன்.

முப்பது வருட போராட்டத்தையும் முப்பதாயிரம் போராளிகளின் தற்கொடையையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் தியாகத்தையும் பல்லாயிரம் கோடிகள் பெறுமதியான தமிழர் உழைப்புகளையும் உடமைகளையும் ஒரு பொருட்டாக கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாது பிரபாகரனை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் மே-18ல் முள்ளிவாய்க்காலில் என்ன முடிவைக் கண்டதோ அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து அரசியல் பாரத்தையும் சம்பந்தர் தனது சொந்த அரசியல் பழிவாங்கலுக்காக திருகோணமலையில் முடக்க முடிவெடுத்த செயல் ஜனவரி-26 ஒரு வரலாற்று துன்பியல் நிகழ்வாக பிற்காலத்தில் சம்பந்தரே மனம் வருந்திக் கொள்வார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மீதிப் பேர் சொந்த புத்தியில் ஒரு அரசியல் கருத்தை முன்வைக்க தெரியாதவர்கள். சில தமிழ் செய்தி நாளிதழ்கள் தமது வியாபார அனுகூலங்களுக்காக செய்யும் அரசியல் சித்து விளையாட்டை புரிந்து கொள்ளக்கூடியளவு பல கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் ஞானம் பரிதாபகரமானது.

பிரபாகரனின் அரசியல் வெற்றியைக் கொண்டு தருமா அல்லது தோல்வி கண்டு முடியுமா என்பதை அறிய தமிழ் மக்கள் முப்பது வருடங்கள் பொறுமை காத்திருந்தனர். சம்பந்தரின் அரசியல் முடிவை அறிய ஆக மூன்று கிழமைகள் தமிழ் மக்கள் பொறுமை காத்தால் போதும் எனத் தொடர்ந்த அவரின் உள்ளக் குமுறல்களை பொறுமையாக தொடர்ந்து எம்மால் கேட்க முடியவில்லை.

அந்த அழைப்பை மேற்கொண்ட தொலைபேசி அட்டையில் இருந்த நிமிடங்கள் அவ்வளவுதான்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply