ஜனாதிபதியின் வருகைக்காக தயாராகும் மன்னார்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக எதிர்வரும் 9ஆம் திகதி மன்னார் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வரவையொட்டி மன்னாரில் பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பிற்கான விரிவான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மற்றும் அவருடன் வரவிருக்கும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காக மன்னார் பொது விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேடையைச் சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு விளையாட்டுத்திடலைச் சுற்றிலும் அதிசக்திவாய்ந்த மின்விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் பொருத்தப்படுகின்றன.

மைதானம் முழுவதும் பாரிய பதாதைகளாலும், நீலத் தோரணங்களாலும், அலங்கரிக்கப்படுகின்றன. அத்துடன் நகரம் முழுவதும் நீல மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பதாதைகளும் வைக்கப்படுகின்றன. இந்நிகழ்விற்கு பல்லாயிரக்கணக்கில் மன்னார் மக்கள் வருகை தருவர் என ஏற்பாட்டாளர்கள் கருதுவதால் அவர்களது தாகசாந்திக்கு இசைவாக பல நீர்த்தாங்கிகள் மைதானத்தின் உள்ளே வைக்கப்படுகின்றன.

மன்னார் நகருக்கு வருகைதரும் ஜனாதிபதி அவர்களை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயத்தம் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி அவர்களுடன் மீள் குடியேற்ற மற்றும் அனர்த்தநிவாரண சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு செயலணித் தலைவருமான கௌரவ பஷில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆளாட்சி அதிகாரியுமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட பல அமைச்சர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply