யாரும் கைது செய்யப்படவில்லை: லீனா மணிமேகலை
இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில், ஏற்பட்டது தான் போலீஸ், விசாரணை குழப்பம் எல்லாம். இதில் நானோ சோபாஷக்தியோ யாரும் கைது செய்யப்படவில்லை என லீனா மணிமேகலை தன்னிலை விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார்.
தானும் சோபாஷக்தியும் கைது செய்யப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியுமென லீனா தனது இணையத்தள `புளொக்`கில் குறிப்பிட்டுள்ளார். `கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்` எனும் தலைப்பில் வெளியான லீனா மணிமேகலையின் முழு அறிக்கையும் பின்வருமாறு;
கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு. படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை, வசன இலாகாவில் வேலை செய்கிறார். படத்தில் பேட்டா பிரசினை என்பது பொய்க்கதை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் எல்லோரும் மாதச் சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள்.
இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில், ஏற்பட்டது தான் போலீஸ், விசாரணை குழப்பம் எல்லாம். யாரும் கைது செய்யப்படவில்லை. தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி, தினமலர் விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியும்?
படம் முடிவடைந்து பார்வைக்கு வருவதற்கு முன்னே அதைப் பற்றிய அனுமானங்களும் வெட்டிப் பேச்சும் அநாகரிகமானது. அருவருப்பானது.
பிறகு என்னை காலத்துக்கும் தொடர்ந்து வரும் அவதூறு, நான் ஈழத் தமிழர்களிடம் காசு வேண்டி குறும்படம் செய்தேனென்றும், வேலைசெய்தவர்களுக்கு காசு தரவில்லையென்பதுமான செய்திகள்.. இந்த வதந்திகளை விடாமல் பரப்பி வருபவர்கள் ஆதாரத்தை தந்து நிரூபிக்காமல் பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை நான் எந்த ஈழத் தமிழரிடமும் காசு வாங்கியதில்லை, என்னோடு வேலை செய்தவர்களோடு ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டை பகிர்ந்தே வேலை செய்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்தது உண்மை. பலிபீடம், அலைகளைக் கடந்து, பிரேக் தி ஷக்க்லஸ் என்று படங்கள் எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஒப்பவில்லை என்பதால், நிறுவனங்களோடு வேலை செய்வதை நிறுத்தி விட்டேன். எடிடோரியலாக என்னை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கும் சூழலில் மட்டுமே என்னால் இயங்க முடியும்.
தவிர, தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் தோழமைக் குரல், லீனா மணிமேகலை என்ற தனிநபர் சார்ந்த இயக்கங்கள் அல்ல. பொறுப்பாளர்கள் குழு, ஒருங்கிணைப்பாளர்கள் குழு, என்று ஒரு பெரிய டீம் அதற்காக வேலை செய்தது. அதில் பங்காற்றியவர்கள் ஒரு குறைந்த பட்ச அரசியல் இணைவு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பணி செய்தார்கள். போராட்ட வடிவங்களின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஒட்டுமொத்த குழுவை கேள்வி கேட்க வேண்டும். குழுவின் அங்கத்தினராக நானும் அதற்கு பதில் சொல்வேன். அதை விட்டு கேலி பேசும் கையலாகாதவர்களுக்கு என் நேரத்தை வீணாக்க முடியாது.
இதைத் தவிர என் புகைப்படங்கள் பற்றியோ, என் குடும்ப விவகாரங்கள் பற்றியோ, என் நண்பர்கள் பற்றியோ ஒரு மஞ்சள் பத்திரிக்கை தரத்திற்கு ஆபாசமாக எழுதுபவர்களை என் கால் தூசுக்கு கூட கருத முடியாதது.
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply