நறுக்கென நாலு கேள்விகள்: வரதரிடம் குமுதம்

இலங்கையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது முதல்வராக இருந்தவர் வரதராஜப்பெருமாள். இப்போது வட இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரது மகள் நீலாம்பரி மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கியதை அடுத்து மீண்டும் செய்திகளில் அடிபடத்துவங்கியுள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கு வரதரின் நறுக்கான பதில்கள்;

ஏன் நீங்கள் இலங்கை போகவில்லை?

‘1991-ல் பிரேமதாசா – பிரபாகரன் உறவு எங்களை இலங்கையில் இருக்க முடியாமல் செய்தது. அதனால் இந்தியா வந்தேன். எட்டு ஆண்டுகள் இந்தியாவில். பிறகு ஒருமுறை இலங்கை சென்றேன். மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட்டேன்.

இலங்கையில் இருந்தால், தமிழ்க்கட்சிகள் ஒன்றில் புலிகளுக்கு எடுபிடிகளாக இருக்கவேண்டும் அல்லது சிறீலங்கா அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். வேறு வகையாக அங்கு எந்தத் தமிழரும் சுதந்திரமாக அரசியலில் இருக்க முடியாது என்ற நிலைமை இருந்ததால், புலிகள் இருக்கும் வரை நான் மீண்டும் செல்லும் நிலைமை ஏற்படவில்லை.’

இன்றைய நிலையில் எந்த மாதிரியான தமிழர் இயக்கங்கள் இலங்கைத்தமிழர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்.?

‘ஆயுதம் தாங்கிய இயக்கமொன்று எந்தவொரு அளவிலும் எந்தவொரு வடிவிலும் அங்கு தலைதூக்கிவிடக்கூடாது. தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் எனக்கோரும் ஒரு இயக்கம், முதலில் தமிழர்களின் தனி மனித சுதந்திரங்களை அங்கீகரிக்கவேண்டும். அந்த இயக்கங்களிலேயே சாதி ரீதியாக தமிழ்மக்கள் இரண்டாம் பிரஜைகளாக இருக்கக்கூடாது. அது போன்ற ஜனநாயக இயக்கங்கள் தேவை.’

விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கு நீங்கள் இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டதாக கூறுகிறார்களே..?

‘இந்தியா என்ன விளையாட்டுப்பிள்ளையா, நான் கைப்பாவையாக இருப்பதற்கு? விடுதலைப்புலிகளை ஒழித்தது இலங்கை இராணுவமே. இந்தியா நான் சொல்லிய ஆலோசனைப்படி இலங்கைக்கு உதவி செய்திருந்தால் இந்தியா அல்லவா எனது கைப்பாவையாக இருந்திருக்கவேண்டும்?’

தமிழ் ஈழம் அவ்வளவுதானா?

‘இன்னொரு தடவை அவ்வாறானதொரு கோரிக்கை மேலெழாமற் பார்த்துக்கொள்வதே இலங்கைத்தமிழர்களுக்கு நல்லது. முழு இலங்கையர்களுக்கும் நல்லது. தமிழகத்துக்கும் நல்லது. இந்தியாவின் நலன்களுக்கும் அது அவசியமே.’

(குமுதம்)

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply