பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பால் கழட்டிவிடப்படவுள்ளவர்கள் யார்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தினை கூட்டமைப்பு சந்திக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டிருந்தார் ஆனால் இந்திய அரசாங்கம் திகதியினை வழங்கவில்லை இப்போது தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆகவே இன்று கூட்டமைப்பு இந்தியா புறப்படுகின்றது. இந்தியா செல்லும் கூட்டமைப்பில் வழமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினை சம்பந்தன் அவர்கள் வெட்டி விட்டே செல்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா செல்லும் அணியினர் 16ம் திகதி வரை இந்தியாவில் இருப்பர் எனவும் அங்கு மன்மோகன்சிங் அல்லது வெளிவிவகார அமைச்சரினை சந்திப்பர் எனவும் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதனை யோசித்து செய்யும்படி இந்திய தரப்பால் கூட்டமைப்பிற்கு கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது குறித்து இந்திய தரப்பினர் அமைதியாக இருந்து விட்டதாக கூறப்படுகின்றது. இப்போது இந்தியாவும் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கூறப்படுகின்றது.
இதே வேளை தமிழரசு கட்சியின் மா நாடு முடிய சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் பலர் அங்கிருந்த முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடும் போது கூட்டமைப்பில் ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர்கள் படித்தவர்கள் குறைவு என்றும் இதனால் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளனர். அத்துடன் பேருக்கு முன் சில பட்டங்கள் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கவேண்டும் என விவாதித்துள்ளனர்.
அடுத்துவரும் தேர்தலில் ஆட்களை நியமிக்கும் போது அதற்கேற்பவே நியமிக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதன்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பலரை நீக்கிவிட்டு ( விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட எம்.பி க்கள் இதில் முக்கியமாக நீக்கப்படவுள்ளனர்) புத்திசாலிகள் ஆங்கிலம் கதைக்க கூடியவர்கள் என பலரை புதிதாக களமிறக்க தீர்மானித்துள்ளது தமிழரசு கட்சி.
இந்த புதிய பட்டியலில் உயர் நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், தற்போது பிள்ளையானுடன் இருக்கும் விக்னேஸ்வரன், ஆனந்தசங்கரி, சட்டவாளர் உமேந்திரன்,சாந்தி சச்சிதானந்தம், சி.வி.கே சிவஞானம் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
எது எப்படி இருப்பினும் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் அதே நேரம் விடுதலைப்புலிகளால் தேர்தலிற்காக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கணிசமானவர்களுக்கு அடுத்த முறை சீட்டு கிடைக்காது என்பதுதான் நிலமை.
இதே வேளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை செய்யும்படியே கூட்டமைப்பினை வலியுறுத்தி வருகின்றது. அத்துடன் கூட்டமைப்பு மக்களிற்குள் புனர்வாழ்வு திட்டங்களை செய்யவேண்டும் என்றும் அதற்காக இந்திய அரசு கொழும்பு தூதரகம் ஊடாக உதவிகளை வழங்கும் என்று கூறியுள்ளது. இந்த உதவிகளில் சில திட்டங்களுக்காக நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்கு கோழி வளர்ப்பு திட்டம், துவிச்சக்கரவண்டி வழங்குதல் போன்ற திட்டங்களை செய்வதற்கு கூட்டமைப்பின் ஒரு சில முக்கிய எம்.பிக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல விடுதலைப்புலிகளின் நாமம் கூட எள்ளளவும் இருக்க கூடாது என்பதில் இலங்கை அரசாங்கத்தைவிட இந்தியாதான் அதிக வேகத்துடன் செயற்படுகின்றது என்பது தெளிவு. ஆனால் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் சேர்ந்து போய்த்தான் எதனையும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்தும் நிலையிலேயே உள்ளனர்.
இவ்வாறு மதில் மேல் பூனைகள் போல் இருந்து அப்பப்போ இருக்கும் பலத்தோடு சேர்ந்து தமது அரசியல் இருப்பிடத்தை எவ்வாறு புதுப்பித்தும், நிலை நிறுத்தியும் செல்லும் சில கூட்டமைப்பின் மூத்தோர்களை தான் அண்மையில் உதயன் ஆசிரியர் தலையங்கமும் சம்பந்தனின் ஆழுமை பற்றி புகழ்ந்தது. ஆகவே நாமும் அரசியலில் அவர்கள் சுட்ட பழங்களாக உள்ளனர் என தைத்திரு நாளில் புகழ்ந்திடுவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply