வடக்கு கிழக்கை இணைக்க இடமளிக்கப்போவதில்லை: ஜே.வி.பி.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்க உயர் நீதிமன்றம் சென்ற ஜே.வி.பி.யும் அதற்கான தீர்ப்பை வழங்கிய (முன்னாள்) பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் அதை யுத்த வெற்றியின் மூலம் உறுதி செய்த இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் இன்று ஒரே மேடையில் இருக்கும் நிலையில், பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படாது என்றும், அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜே.வி.பி. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பி. இந்த கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு பேசுகையில், 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியதும் நிறைவேற்று அதிகாரத்தை பாவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் வடக்கு, கிழக்கை பிரிக்குமாறு நாம் அவரிடம் கூறியிருந்தோம். நிறைவேற்று அதிகாரத்தால் அதை செய்ய முடியும் எனினும் அதிகாரம் இருந்தும் மகிந்த ராஜபக்ஷ அன்று அதை செய்யவில்லை.
எனவே தான் ஜே.வி.பி.க்கு இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றம் சென்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய வேண்டி ஏற்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது தற்போதைய அரசாங்கம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பி.ஏ.ரட்னாயக்க, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவசரகாலச் சட்டத்தின் கீழேயே வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்ததற்கு அமைய 31ம் உப பிரிவின் பிரகாரம் இந்த இணைப்பு சட்ட ரீதியானது என்றும் எனவே சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு கேட்டிருந்தார்.
எனவே, அன்று நீதிமன்றத்தில் இந்த இணைப்பை சட்ட ரீதியானது என்று கூறிய அரசாங்கம் தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், செய்து கொண்ட உடன் பாட்டின் மூலம் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கும் முயற்சி இருப்பதாக எதிரணி மீது குற்றஞ்சுமத்தி சேறு பூசுகிறது. ஆனால், இதே அரசாங்கம் இதுவரையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் வடக்கு, கிழக்கு பிரித்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமா அல்லது மீண்டும் இணைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி தனது தெளிவான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அது குறித்து அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையும் நழுவல் போக்கிலேயே இருந்தது.
மகிந்த ராஜபக்ஷ முடியாது என்று கூறியதை ஜே.வி.பி. உயர் நீதிமன்றம் சென்று செய்து காட்டியது. எனவே, வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்க ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது. வடக்கு, கிழக்கைப் பிரிக்க நீதிமன்றம் சென்ற ஜே.வி.பி.யும் அதற்கு தீர்ப்பு வழங்கிய (முன்னாள்) பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் அதை யுத்த வெற்றியின் மூலம் உறுதி செய்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் இன்று ஒரே மேடையில் இருக்கிறோம். எனவே, வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படாது. அதற்கு இடமேற்படுத்தி விடவும் மாட்டோம். இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிரணி பொது வேட்பாளர் ஒப்பந்தம் செய்து கொண்டதாக ஆளும் தரப்பினர் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சரத்பொன்சேகாவுடன் எந்த ஒப்பந்தமும் நிபந்தனையும் இன்றியே இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். எனினும் எமக்கு எதிர்த் தரப்பினர் ஊடகவியலாளர்களை தவறான செய்திகளை எழுத வைத்து வாக்குத் தேட முயற்சிக்கின்றனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். அப்படியென்றால் அது தான் இரகசிய ஒப்பந்தம். அது மட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பற்றியெல்லாம் ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். எனவே இவை பற்றி அவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து விளக்கமளிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தவர்களில் பெரும்பான்மையானவர்களும் கடந்த காலங்களில் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டவர்கள் என்பது உண்மை. எனினும் கடந்த காலங்களிலேயே நாம் தேங்கி நின்று கொண்டிருந்தால் நாம் முன்செல்வது எப்படி? யுத்தத்தின் பின்னர் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தைநாம் தவறவிட்டு விடக் கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவை பெற்றுக் கொள்ள ஆளும் தரப்பினர் முயற்சி செய்தனர். எனினும், அது முடியாமல் போய்விட்டது. இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணி பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யவே ஆளும் தரப்பினர் தற்போது இனவாதத்தை தூண்டிச் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இது இந்த நாட்டை மீண்டும் இனவாதமொன்றுக்குள் தள்ளுவதாகவே அமையும்.
இதேநேரம் ஆளும் தரப்பினர் வங்குரோத்து அடைந்த நிலையில் எதிரணி பொது வேட்பாளர் மீது சேறு பூச முயற்சிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான கே.பி. எனும் குமரன் பத்மநாதனை கொண்டு சரத்பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை பரப்புவதற்கான முயற்சிகள் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது சரத்பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலானது விபசார பெண் ஒருவரினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக காட்டுவதற்கான கீழ்த் தரமான முயற்சிகள் இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply