அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளராக ஹிலாரி கிளின்டன் நியமனம்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமா தனது நிர்வாக குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அடுத்த இராஜாங்கச் செயலாளராக ஹிலாரி கிளின்டனை, ஒபாமா பிரேரித்தார். 
 
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் நிர்வாகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவிருக்கும் ரொபேர்ட் கேட்ஸ் தொடர்ந்தும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றுவார் என நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பராக் ஒபாமா அறிவித்தார்.

ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரை எதிர்வரும் 16 மாதங்களுக்குள் விலக்கிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும், இது பற்றி நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பராக் ஒபாமாவும், அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனும் போட்டிபோட்டனர். எனினும், இறுதியில் பராக் ஒபாமா வெற்றிபெற்று, ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

அத்துடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் கடற்படை அதிகாரி ஜேம்ஸ் ஜோன்ஸ் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், அரிசோனா மாநில ஆளுநர் ஜேனட் நெபோலிடானோ உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.  இவர்களின் நியமனத்தை விரைவில் செனட் சபை அங்கீகரிக்கும் எனத் தெரியவருகிறது.

இதேவேளை, அமெரிக்கா பாரிய நிதிநெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் பதவியேற்கவிருக்கும் பராக் ஒபாமா, நிதிநெருக்கடியை எதிர்கொள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்குமென பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொருளாதார நெடிக்கடியை எதிர்கொள்வது பற்றித் தான் ஆலோசித்து வருவதாக பராக் ஒபாமா அண்மையில் கூறியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply