மறைந்த எமது தலைவர் சிறீ சபாரட்னத்தின் மூத்த சகோதரர் ஆயுள்வேத மருத்துவர் ஜி.எஸ். கந்தா அவர்களின் தேர்தல் தொடர்பான மடல்

தமிழர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தருவேன் என்று சொல்லும் ஜனாதிபதிக்கு ஏன் ஒரு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது?

அன்பார்ந்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, நடந்து முடிந்தது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான போராட்டமல்ல பயங்கரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கும் அரச இராணுவத்துக்குமான போராட்டமே.

இந்தளவிலாவது விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை புலிகளின் கேடயப் பிடியிலிருந்து காப்பாற்றிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும்.

முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷவால் ஏன் இன்னமும் தமிழ் மக்களது உரிமைகள் வழங்கப்படவில்லை என கேள்வி எழலாம். அது நியாயமான கேள்விதான். ஆனால் ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மனம் இருந்தது.

அப்போ அவருக்கு பாராளுமன்றத்தில் போதிய பலம் இருக்கவில்லை, என்பதுடன் விடுதலைப்புலிகளும் எந்த வழியிலும் ஒத்துழைக்க முன்வரவில்லை. பேச்சு வார்த்தைக்கான சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் அர்த்தமற்ற காரணங்களைக் காட்டி பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை நிராகரித்ததோடு, அர்த்தமற்ற தாக்குதலை உருவாக்கி உயிர்பலிகளுக்கு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணினார்கள்.

விடுதலைப் புலிகள் ஓரளவுக்காவது ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார். இதுவரை ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தைரியம் இல்லாத கோழைகளாகவே இருந்தார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு இரும்பு மனிதர். அவரிடம் தைரியம் இருக்கிறது. நேர்மைத் திறமும் இருக்கிறது.

அப்படி ஒரு தைரியமான மனிதராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்த காரணத்தால் தான் உலகின் உயர்ந்த ஸ்தாபனமான ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசியது மட்டுமல்ல அகில உலகத் தலைவர்கள் முன்னிலையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என உறுதியளிக்கவும் அவரால் முடிந்தது.

இதுவரை ஆட்சி செய்த எவருமே இலங்கையில் தமிழ் இனம் இருப்பதையே காட்ட முன்வராத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசி இலங்கைத் தமிழ் இனத்துக்கு அசைக்க முடியாத கெளரவத்தைக் கொடுத்தார்; அது மட்டுமல்ல பாராளுமன்றத்தில் பொதுக்கூட்டங்களில் எல்லாம் தமிழிலும் பேசி நம்மை கெளரவப்படுத்துகிறார்.

இதுவரை தமிழர்களது உரிமைகள் பற்றிப்பேசினால் தமக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாமல் போகலாம் என்ற காரணத்தால் தேர்தல் காலங்களில் எந்தச் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களது உரிமைகள் பற்றிப் பேசிய வரலாறே கிடையாது.

அதற்கு மாறாக தமிழர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பைத் தாருங்கள் என பகிரங்கமாகவே கூறிக்கொண்டு தேர்தலில் வாக்குக்கேட்டு ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்ற ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் ஏன் எமது வாக்குகளைக் கொடுத்து கெளரவிக்கக் கூடாது?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சட்டப்படிப்புடன் நீண்ட அரசியல் அனுபவம் உள்ள ஒருவர். அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்த நான்கும் வேந்தர்க்குத் தேவை என்ற வள்ளுவன் வாக்கிற்கமைய உள்ள இவரே தகுதியானவர். இவராலேதான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நம்புவோம்.

அன்பார்ந்த தமிழ் மக்களே கூட்டணிப் பாராளுமன்றப் பிரதிநிதிகளெல்லாம் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனையில் வந்தவர்கள் தானே. மக்கள் சிந்தித்தா வாக்குப் போட்டார்கள். இல்லையே, விடுதலைப்புலிகளின் துப்பாக்கி தானே இவர்களுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்தது.

இவர்கள் எல்லாம் எம்மைப் போல விடுதலைக்குப் போராடி இராணுவ சித்திரவதைகளை கண்டார்களா? இல்லை. நம்மைப் போல் எட்டு பத்து வருடங்கள் சிறையிலிருந்துள்ளார்களா? அல்லது துப்பாக்கிகளுக்கும் குண்டு வீச்சுகளுக்குமிடையே திசை தெரியாது உயிர்பிச்சை கேட்டு ஓடியபோது அடைக்கலம் கொடுத்து ஆறுதல் தந்தார்களா? இல்லையே அப்படி இருக்க தமிழ் மக்களின் வாக்குகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனவே கூட்டணி எம். பிக்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக் கெதிரான முடிவு சரியானதல்ல என்பதே ஈழ தமிழ் மக்களுக்காக உண்மையாகப் போராட்டியவர் களின் முடிவாகும்.

ஜனாதிபதிக்கான இந்தத் தேர்தல் இலங்கை தமிழ் மக்களாகிய எமக்கு ஒரு வாய்ப்பானதாக அமையட்டும். இலங்கை தமிழ் மக்களது உரிமைகளை வழங்கத் தயாராக இருக்கும் உறுதியும், தகுதியும் தன்னகத்தே கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து நமது பிரச்சினைக் கான தீர்வு கிடைக்க ஒரு வாய்ப்பளிப்போம்.

நமது உரிமைகளை வழங்கி நிம்மதியாக நமது மண்ணில் நாம் வாழ இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதுவோமாக…

அன்புடன்,

டாக்டர் ஜி. எஸ். கந்தா

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply