ஜனாதிபதித் தேர்தல் நாளை; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; 11098 வாக்களிப்பு நிலையங்கள்; நாடு முழுவதும் கடும் பாதுகாப்பு: தேர்தல்கள் ஆணையாளர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 26ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
வழமை போன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும். நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 40 இல ட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென நாடு முழுவதும் 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சொந்தமான பிரதேசமாகக் கருதப்படும்.
இந்தப் பிரதேசங்களிலோ அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் எங்கேனும் எவரேனும் செயற்பட்டால், குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக நாடு முழுவதற்கும் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இருமுனைப் போட்டியாக இந்தத் தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை காலம் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாட்டு மக்கள் மத்தியில் விறுவிறுப்பான சூழலில் நடைபெறுகின்றது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருப்பது இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.
மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடையாள த்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்க ப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் நாளைய தினம் மாலை வரை தபாலகங்களில் தமக்குரிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு ‘1’ என்றும் இரண்டாம வருக்கு ‘2’ என்றும் மூன்றாமவருக்கு ‘3’ என்றும் அடையாளமிடலாம். முதலாவது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும்.
தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றிலிருந்து தமது கடமைகளை ஆரம்பிக்கிறார்கள்.
தேர்தல் பணிகளுக்காக 69 ஆயிரம் பொலிஸாரும், மற்றும் முப்படையினரும் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து ரோந்து பணியிலும் ஈடுபடுவார்கள். வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரும் முப்படையினரும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் காரியாலயத்திற்கான பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுதல், வாக்கெண்ணும் நிலையங்களைப் பாதுகாத்தல், தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு வேலைத் திட்டம் தேர்தலைத் தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வேட்பாளர்களினதும், அவர்களது ஆதரவாளர்களினதும், பொதுமக்களினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்தியி ருக்கின்றார்.
ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் மாவட்டத்திற்கும் ஒரு தேர்தல் காரியாலயம் மாத்திரம் இயங்கலாம். தேர்தல் தினத்தன்றும், அதற்கு முன்னரும், பின்னரும் ஊர்வலம் செல்லுதல், கூட்டம் நடத்துதல், அழுத்தம் கொடுத்தல், பல்வேறு கையேடுகளை பகிர்ந்தளித்தல் போன்றன சட்ட விரோத செயல்களாக கருதப்படும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் மாஅதிபர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் உள்நாட்டு கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக 50 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply