மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறியவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளடக்கிய விதத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந் திருப்பதாக தெரியவருகின்றது.
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் பகுதியில் இன்று இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள், வாக்குச்சாவடிகள், போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்புக்கள், மற்றும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் உள்ளடக்கியதான பல்வேறு முன்னேற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.
இடம்பெயர்ந்து மீள் குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் வாக்களிப்பதற்கு இலகுவாக முடிந்த அளவு அவர்களது பிரதேசங்களிலேயே வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடிகள், வாக்களிப்பு நிலையங்களை அமைத்து அவற்றில் பணியாற்றுவதற்கான பணியாளர்களையும் தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதிலும் 68 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதேவேளை அசம்பாவிதங்கள், வன்முறைச்சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இதே வேளை இடம்பெற இருக்கும் தேர்தலை கண்காணிப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் ஊடாக அனுமதி கோரி மன்னார் மாவட்டத்தில் அவர்களது பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நேற்று நடாத்தியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply