நாடு தழுவி இன்று காலை முதல் மக்கள் உற்சாகமாக வாக்குப் பதிவு; வன்முறைச்சம்பவங்கள் சில யாழில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிப்பு

இலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு முதல் மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தத் தேர்தலையும் விட மக்கள் காலை முதல் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமை போன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென நாடு முழுவதும் 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் அலுவலகம் தாக்கப்பட்டதாக சில இணையத் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நவாலி, மானிப்பாய் மற்றும் நல்லூர் பகுதிகளில் குண்டு வெடிச்சத்தம் கேட்டதாக அங்குள்ள தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சில சர்வதேச ஊடகங்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், இந்தச் சம்பவங்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிய வருகிறது. இச்சம்பவங்களை அடுத்து குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply