லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் பிரகீத் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு; எதிரணி மறைத்து வைத்திருப்பதாக அரச தரப்பு குற்றச்சாட்டு

இணையத்தள ஊடகமான லங்கா இ நியூஸ் இன் செய்தியாளரான பிரகீத் எக்னலிகொட நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கடமைக்காகச் சென்றுவிட்டு இரவு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றபோதிலும் அவர் இதுவரையில் வீடு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இவர் காணாமல்போனமை தொடர்பாக பொலிஸார் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பிரகீத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் ஞாயிறன்று இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தரப்பினர் நேற்றுத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் தேர்தல் பிரசார அலுவலகம் விடுத்திருக்கும் அறிக்கையில் எதிரணியினர் பிரகீத்தை மறைத்து வைத்துவிட்டு அரசு மீது பழி சுமத்த முற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. எதிரணியினர் அரசாங்கம் ஊடக அடக்குமுறையை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். அதில் மற்றுமொரு அங்கமே பிரகீத் காணாமல்போன விவகாரமாகும்.

இக்குற்றச்சாட்டு மக்களைத் தவறாக வழி நடத்தும் முயற்சியாகும்.எதிரணியின் இந்தக் கடத்தல் நாடகத்துக்கு செய்தியாளர் பிரகீத் துணை போயிருப்பதாகவே நாம் காண்கின்றோம். பிரகீத் கடத்தப்படவுமில்லை காணாமல்போகவுமில்லை. அவரை மறைத்து வைத்து எதிரணியினர் வங்குரோத்து அரசியல் நடத்த முனைகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட கடத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்த முறைப்பாடு இணைய தளத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒர் போலி நாடகமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் தமது கட்சி காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த ஊடகவியலாளர் கடத்தப்படவில்லை என்பதனை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் தங்களிடம் காணப்படுவதாகவும், அந்த ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply