இந்தியாவின் 60வது குடியரசு தினம்
இந்தியாவின் 60வது குடியரசு தினம் அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் ராணுவ, கலாச்சார அணிவகுப்பு நடைபெற்றது. வழக்கம் போல பெரும் உற்சாகத்துடன் தேசியக் கொடிகளை ஏற்றி நாட்டு மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.
தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டத்திற்கு மத்தியிலும் குடியரசு தின விழா களை கட்டியது. காலை போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியி்ல் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினரான தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக், பல நாட்டு தூதர்கள், சோனியா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ரதங்கள், பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
அணிவகுப்பு நடந்த 8 கிலோ மீட்டர் தூர பாதை முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணித்தன. 105 கண்காணிப்பு கேமராக்களை வைத்து அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.
கடும் பனி மூட்டம் காரணம்க 100 மீட்டர் தூரம் வரையே எதிரில் இருக்கும் பொருட்கள் தெரிந்தன. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதால் போலீசார் மிக எச்சரிக்கையாக இருந்தனர்.
குடியரசு தின விழாவில் போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பனி மூட்டம் இருந்ததால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பலத்த பாதுகாப்பு:
குடியரசு தின அணிவகுப்பின்போது நாச வேலைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரையிலான பாதை நெடுகிலும் 18,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அணிவகுப்பைக் காண கடும் குளிர், பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply