மழை வெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிப்பு
மன்னார் மாவட்டத்துக்கான மின்சாரக் கோபுரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் மன்னாருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 7000ற்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் வங்காலைக்கு அருகிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மன்னாருக்கான பிரதான மின்சார விநியோகக் கோபுரம் வெள்ளத்தால் சரிந்து விழ்ந்துள்ளது. அந்தப் பகுதி சதுப்பு நிலம் என்பதால் அங்கு இன்னமும் நீர் தேங்கியிருப்பதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனால், முள்ளிக்குளம் பகுதியிலிருந்து பிரதான வீதி வழியாக புதிய மின்சாரக் கம்பங்களை அமைத்து அதனூடாகவே மன்னாருக்கு மின்விநியோகம் மேற்கொள்ளவேண்டி இருப்பதாகவும், இதற்குப் போதியளவு ஆளணி மற்றும் உபகரங்கள் மன்னாரில் இல்லையெனவும் மின்சாரசபை கூறியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்தே உபகரணங்களும், ஆட்களும் வரவழைக்கப்படவேண்டியிருக்கின்ற போதும், மின்சாரசபையின் வாகனங்கள் மதவாச்சி சோதனைச் சாவடியைத் தாண்டிவருவதில் பாதுகாப்புக் கெடுபிடி காணப்படுவதால் திருத்தவேலைகளை ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் மன்னார் மாவட்டத்துக்கான மின்விநியோகத்தை சீர்செய்துவிடமுடியுமென மின்சாரசபை நம்பிக்கை வெளியிட்டிருக்கிரது.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு காரணமாக குளங்களில் நீர் நிரம்பியதால் மன்னார் மாவட்டத்தில் மூன்று குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 8 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சூரியன்கட்டைக்காடு, சாம்பன் கட்டைக்காடு, புதுகமம், வஞ்சியன்குளம் உட்பட 8 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பொது இடங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளப்பெருக்கால் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் தேங்கியிருக்கும் வெள்ளநீரை இயந்திரங்களின் உதவியுடன் கடலுக்குள் செலுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply