தோற்றுப்போன தலைமை இனி ஒதுங்கலாமே!

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில் வேட்பாளர்கள் மாத்திரம் அடங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப் பட்டியலில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தோல்வி அதன் பூர்வ ஜன்மமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பித்தது.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குப் பிரபல்யமான ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் திடீரெனத் தனிநாட்டுக் கொள்கையில் பற்று ஏற்பட்டது. புலிகளுடன் அணிசேர்ந்து தனிநாட்டுக்காகப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர்.

புலிகள் யுத்த களத்தில் தோல்வி. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் களத்தில் தோல்வி. தனிநாடு சாத்தியமில்லை என்றதும் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியது. தனிநாட்டுக் கொள்கையைப் பகிரங்கமாகக் கைவிடவும் திராணி இல்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவும் துணிச்சல் இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான திட்டமொன்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றார்கள். இன்னும் அந்தத் திட்டம் வெளிவந்த பாடாக இல்லை. பல தசாப்தங்களாக உள்ள பிரச்சினைக்குப் பல தசாப்த கால அரசியல் அனுபவம் உள்ளவர்களால் சில மாதங்களுக்குள் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்க முடியாதா?

சரியாகவோ பிழையாகவோ கூட்டமைப்பின் பூர்வஜன்மங்களுக்குக் கொள்கைத் திட்டங்கள் இருந்தன. தமிழரசுக் கட்சிக்குச் சமஷ்டி. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தனிநாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதுவும் இல்லை. எட்டு மாதங்களாகத் தயாரிக்கின்றார்கள்!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் இல்லாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோருவதும் அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதும் போலியானவை. தீர்வுத் திட்டமொன்றை வெளியிட முடியாதிருப்பது கூட்டமைப்பின் மிகப் பெரிய தோல்வி.

அடுத்த தோல்வி ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்டது.

எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. விளக்கமாகக் கூறுவதானால், புலிகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சிகளும் ஐக்கியத்துடன் ஒரே அணியில் செயற்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலர். வேட்பாளரை நிறுத்த வேண்டுமென இன்னொரு பிரிவினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று வேறு சிலர். பொன்சேகாவை ஆதரிப்பதற் குப் பெரும்பான்மை முடிவு. ஐக்கியக் கோட்பாட்டுக்குத் தோல்வி.

பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையைப் பெற்றுக்கொடுத்தார்களா என்றால் எதுவுமில்லை. அதிலும் தோல்வி.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் எவ்விதத் தீர்வையும் பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியவில்லை. இந்த விடயத்தில் படுதோல்வி.

தோற்றுப்போன தலைமை இனி ஒதுங்கலாமே!

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply