தமிழ் மக்களை வழிநடத்த புதிய தலைமை அவசியம்
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட இருபது லட்சம் அதிகப்படி வாக்கு களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதது ஒரு குறைபாடு.
கடந்த வியாழக்கிழமை ஊடகங்களின் தலைவர்களையும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி வட மாகாண வாக்களிப்பு பற்றிய தனது கருத்தைத் தெரிவித்தார். தனக்கு வடக்கில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், நீண்ட கால இடைவெளிக்குப் பின் தேசிய ரீதியிலான தேர்தலொன்றில் பங்கு பற்றுவதற்கு வடபகுதி மக்கள் முன்வந்திருப்பது உற்சாகமூட்டும் வளர்ச்சிப்போக்கு என்று அவர் கூறினார்.
புலிகளின் கை மேலோங்கியதற்குப் பின் வடபகுதி மக்கள் தேசிய அரசியலிலிருந்து துண்டிக்கப்பட்ட வர்களாகவே இருந்தனர். அதற்கு முந்திய ஜனாதிபதித் தேர்தல்களில் அவர்கள் ஆர்வத்துடன் வாக்க ளித்தார்கள். ஜனாதிபதி வேட்பாளர்களான ஹெக்டர் கொப்பேகடுவவும் சிறிமாவோ பண்டாரநாயகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றதை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்.
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற் கொண்ட தீர்மானம் துரதிஷ்டவச மானது. எவ்விதமான நன்மையை எதிர்பார்த்து இத்தீர்மானத்தை மேற்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். சரத் பொன்சேகா சிறுபான்மையினர் பற்றி நல்ல வார்த்தை பேசாதவர். கனேடியப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் பொன்சேகா தெரிவித்த இனவாதக் கருத்தை இலகுவில் மறக்க முடியாது. பொன் சேகாவின் அணியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இலங்கையில் செயற்படும் பேரினவாதக் கட்சிகளுள் இதுவுமொன்று.
பொன்சேகாவின் இன்னொரு அணி ஐக்கிய தேசியக் கட்சி. இக்கட்சி தமிழ் மக்களின் ஆபத்தான எதிரி. அதாவது நண்பனைப் போல் நடித்துக் குழு பறிக்கும் எதிரி. இனப் பிரச்சினையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான பங்களிப்புச் செய்திருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடந்தேறிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே இனப் பிரச்சினையின் நதிமூலம். இக்குடியேற்றத் திட்டங்களின் பிதாமகர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான டி. எஸ். சேனநாயக்க. சிங்களம் மட்டும் என்ற குரலை முதலில் ஒலித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே. ஆர். ஜயவர்தன.
பண்டா – செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதைத் திட்டமிட்டுத் தடுத்ததில் ஜே. ஆர். ஜயவர்தனவுக்குப் பிரதான பங்கு உண்டு. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் பின்பற்றிய தமிழர் விரோதக் கொள்கையையே இன்றைய தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் பின்பற்றுகின்றார். பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுத்ததன் சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்ஹ. அந்தத் தீர்வுத் திட்டம் நிறைவேறியிருந்தால் இனப் பிரச்சினை பெருமளவில் தீர்ந்திருக்கும். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி பங்கு பற்றவில்லை.
தமிழர் விரோதக் கட்சிகளின் ஆதரவுடன் களத்தில் இறங்கிய சிறுபான்மையின விரோதியான பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் என்ன நன்மைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்பார்த்திருக்க முடியும்?
ஒரு இனத்தின் தலைவர்களாகத் தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் அந்த இனத்தின் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் முன்னுரிமைப் பணியாகக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினையே தமிழ் மக்களின் பிரதான பிரச்சினை. இம்மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்துகின்ற அதேவேளை இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு.
ஆனால் 1947 முதல் இன்று வரையிலான தமிழ்த் தலைமை இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட முடிவும் இந்த வகையானதே.
பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தது. பெளத்த மதகுருமாரின் சத்தியாக்கிரகம் அந்த எதிர்ப்பு இயக்கத்தின் உச்ச கட்டம் எனலாம். அரசாங்கத்திலுள்ள வலதுசாரி சக்திகளும் ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடனேயே செயற்பட்டார்கள். பலமான எதிர்ப்புக் கிளம்பிய போதிலும் பிரதமர் பண்டாரநாயக்க அதற்குப் பணிந்து போகாதிருந்தார். ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டிருந்த வலதுசாரி அமைச்சர்கள் தீட்டிய திட்டத்தின்படி சிங்கள ஸ்ரீ பஸ்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டன.
ஒப்பந்தத்தின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்குத் தள்ளுவதே இதன் நோக்கம். இதன் மூலம் பிரதமர் பண்டாரநாயகவை எதிர்ப்புக்குப் பணிய வைக்கலாம் என்று வலதுசாரி அமைச்சர்கள் கருதினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தமிழரசுக் கட்சி ஸ்ரீ எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தது. இந்த நிலையில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்ததாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது.
ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதுதான் சிங்கள ஸ்ரீ பஸ்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் என்பதும் அது வலதுசாரி அமைச்சர்களின் சதி என்பதும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது’ தென்னிலங்கையில் எதிர்ப்புப் பலமடைந்து வருகின்ற பின்னணியில் வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பிப்பது ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுவதற்கே வழிவகுக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை முன்னுரிமையாகத் தமிழரசுக் கட்சி கருதியிருந்தால், அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பிக்காமல் வலதுசாரி அமைச்சர்களின் சதியை அம்பலப் படுத்தியிருக்கக வேண்டும். ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதே இவர்களின் பிரதான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சிங்கள ஸ்ரீ பிரச்சினையைப் பயன்படுத்தித் தமிழ்க் காங்கிரஸ் தலைதூக்கிவிடும் என்ற அச்சத்தால் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பித்தார்கள். ஒப்பந்தம் எக்கேடு கெட்டாலும் தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் 1965ம் ஆண்டிலும் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்தது. அப்போது ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் ஆதரவுடனேயே எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை. தாங்கள் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சி ஆதரவளித்தால் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால் தமிழரசுக் கட்சி பண்டா -செல்வா ஒப்பந்தத்திலும் பார்க்கக் குறைவான அதிகாரங்களைக் கொண்ட மாவட்ட சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தது. மாவட்ட சபைகளைத் தருவது சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக்க ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குக் கூறினார். அதற்குப் பின்னரும் தமிழரசுக் கட்சி அந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்காமல் வேறு விடயங்களுக்கே முன்னுரிமை அளித்துச் செயற்பட்டார்கள்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரித்திருந்தால் அத்தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவியது. அந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப் பிரச்சினையின் தொண்ணூறு வீதம் தீர்ந்திருக்கும். தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்ததால் அத்தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வரமுடிவில்லை. இனப்பிரச்சினையின் தீர்விலும் பார்க்க வேறு விடயங்களுக்கே தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னுரிமை அளித்துச் செயற்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வகித்தவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஒரே பாரம்பரியத்தின் வழிவந்தவர்களே. இனப்பிரச்சினையின் தீர்வுக்காகக் கிடைத்த சந்தர்ப்பங்களை இவர்கள் சொந்த நலன்களுக்காகத் தவற விட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதே தலைமை தொடர்ந்தால் எந்தக் காலத்திலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லாதிருப்பதிலிருந்து இதை விளங்கிக் கொள்ளலாம். அரசியல் தீர்வுக்கான திட்டமொன்றைத் தயாரிப்பதாக ஒரு வருடமாகக் கூறுகின்றார்களேயொழிய இதுவரையில் எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்களிடம் புதிய சிந்தனை தோன்ற வேண்டும். அம்மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமை உருவாக வேண்டும்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பில் அல்லாமல் வேறு தீர்வு சாத்தியமில்லை என்பது கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நிரூபணமாகியுள்ளது. அதேநேரம் எடுத்த எடுப்பில் இறுதித் தீர்வை அடைவதற்குச் சாதகமான சூழ்நிலையும் இப்போது இல்லை.
இந்த நிலையில் தென்னிலங்கையிலுள்ள நட்பு சக்திகளின் ஒத்துழைப்புடன் படிப்படியாக இறுதித் தீர்வை அடை வதற்கான அணுகுமுறையே பொருத்தமானது. இந்த அணுகுமுறையைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும். அதற்கேற்ற தலைமை மக்கள் மத்தியிலிருந்து உருவாக வேண்டும்.
– சுரேஷ் நாகேந்திரா (தினகரன்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply